திருவனந்தபுரம்: சினிமாவில் அறிமுகமான புதிதில் பல அவமானங்களை சந்தித்தேன் என கூறியுள்ளார் துல்கர் சல்மான். மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான். தமிழில் ஓ காதல் கண்மணி, வாயை மூடி பேசவும், சீதா ராமம், ஹே சினாமிகா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ளார். அவர் கூறியது: இப்போது எனது நடிப்பை எல்லோரும் பாராட்டும்போது, சந்தோஷமாக இருக்கிறது. இந்த சந்தோஷம், சினிமாவுக்கு வந்த புதிதில் எனக்கு கிடைக்கவில்லை. பலரும் எனது நடிப்பை விமர்சித்தார்கள். சூப்பர் ஸ்டாரின் மகன் என்ற அந்தஸ்து மட்டும்தான் இருக்கிறது. திறமை எதுவும் இல்லை. நடிக்க தெரியவில்லை என சிலர் ஏளனம் பேசினார்கள்.
சினிமாவிலிருந்து துல்கர் ஓடிப்போவதுதான் ரசிகர்களுக்கு நல்லது என கடுமையாக விமர்சித்தார்கள். இது எல்லாமே எனக்கு வலியை தந்தது. அந்த விமர்சனங்களையெல்லாம் சவாலாக எடுத்துக்கொண்டு போராடி ஜெயித்திருக்கிறேன். இந்தியில் சன்னி தியோலுடன் சேர்ந்து ‘சுப்’ படத்தில் நடித்திருக்கிறேன். படங்களுக்கு விமர்சனம் தரும் விமர்சகர்கள் அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள். அவர்களை கொன்றுவிட்டு, அவர்களின் நெற்றியில் கொலைகாரன், ரத்தத்தில் ஸ்டார்களை போட்டுவிட்டு செல்கிறான். படத்தில் நான் உதவி இயக்குனராகவும் சன்னி தியோல் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளோம். வரும் 23ம் தேதி படம் ரிலீசாகிறது.