வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்-‘இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில், அமெரிக்கா முக்கிய கூட்டாளியாக உள்ளது. இதில், அமெரிக்க வாழ் இந்தியர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது’ என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் வாஷிங்டனில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் தொடர்புடைய, 75 அமைப்புகள் இணைந்து, நேற்று நம் நாட்டின் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடின. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில் கூறப்பட்டுஉள்ளதாவது:நம் நாட்டின் 75வது சுதந்திர தினம், அமெரிக்காவில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள சிறந்த நட்பை வெளிப்படுத்துவதாக உள்ளது.
இந்தியா என்ற பெயரைக் கூறினாலே, நவீன ஜனநாயக குடியரசு; பன்முகத்தன்மை கொண்டது; பழமையான நாகரிகத்தை உடையது; புவி எல்லைகளைக் கடந்த கலாசார பாரம்பரியம் கொண்டது என, பலவற்றை கூற முடியும்.பல்வேறு நாடுகளில் உள்ள இந்தியர்கள், நம் நாட்டின் பல பெருமைகளை அந்த நாட்டுடன் இணைக்கும் கருவியாக உள்ளனர்.அடுத்த 25 ஆண்டுகளில், இந்தியாவின் வளர்ச்சி பயணம் மிகச்சிறப்பாக இருக்கும். இதில், அமெரிக்கா முக்கிய கூட்டாளியாக இருக்கும். அமெரிக்க வாழ் இந்தியர்களின் பங்களிப்பு, அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த கொண்டாட்டத்தில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்றார். அமெரிக்காவுக்கான இந்தியத் துாதர் தரன்ஜித் சிங் சந்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மோடி அழைப்பு
இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சொசைட்டியின் ஆண்டு கூட்டம், புதுடில்லியில் நேற்று நடந்தது. இதற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி அனுப்பிய கடிதம், கூட்டத்தில் வாசிக்கப்பட்டது. இதில், பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:நம் நாடு சுயசார்பு நிலையை எட்ட, தற்போது அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆட்டோமொபைல் துறையிலும் அதிக வாய்ப்புகள் உள்ளன. சுயசார்பு நிலையை எட்டுவதற்கு உதவுவதுடன், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் உரிய தொழில்நுட்பங்களை, புதுமை கண்டுபிடிப்புகளை பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement