சமர்கண்ட்: ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார். உஸ்பெக்கிஸ்தானில் நடக்கும் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
மாநாட்டில் கலந்து கொள்ள உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
உஸ்பெகிஸ்தானில் இருக்கும் சமர்கண்ட் நகரத்தில் இந்த கூட்டம் நடக்க உள்ளது. உக்ரைன் போருக்கு பின்பாக பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் கலந்து கொள்ளும் முக்கியமான முதல் கூட்டம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு
ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு என்பதுதான் உலகிலேயே மிகப்பெரிய கூட்டமைப்பு ஆகும். ஐரோப்பா – ஆசியாவை சேர்ந்த பல்வேறு நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு. மக்கள் தொகை அடிப்படையில் இதுதான் உலகிலேயே பெரிய கூட்டமைப்பாக கருதப்படுகிறது. உலகின் 60 சதவிகித மக்கள் தொகை இந்த கூட்டமைப்பின் கீழ் வருகிறார்கள். அதேபோல் உலகின் 60 சதவிகித நிலப்பரப்பு இந்த கூட்டமைப்பின் கீழ் வருகிறது. உலகின் 30 சதவிகித ஜிடிபி இந்த கூட்டமைப்பின் கீழ்தான் வருகிறது.
உறுப்பு நாடு
இதில் இந்தியா முக்கியமான உறுப்பு நாடு ஆகும். சீனா, இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான், ஈரான் ஆகியவை இந்த கூட்டமைப்பில் இருக்கும் முக்கியமான உறுப்பு நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2020 – 2021 காலகட்டத்தில் சீனா – இந்தியா இடையே கடும் எல்லை பிரச்சனை இருந்தது. அப்போது இந்த எஸ்சிஓ மாநாடு பிரச்சனையின் சூட்டை தணிக்க முக்கிய காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி இன்று மாலை இந்த கூட்டத்தில் பேச இருக்கிறார். இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பிரதமர் மோடி தனியாக சந்திக்கவும் உள்ளார்.
கொரோனா
கொரோனா காலத்தில் இந்த மீட்டிங் ஆன்லைனில் மட்டுமே நடந்து வந்தது. முதல்முறை கொரோனாவிற்கு பின்பாக இந்த மீட்டிங் நேரடியாக நடக்க உள்ளது. உக்ரைன் போருக்கு பின்பாக ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், ரஷ்யா தான் தனிமைப்படுத்தப்படவில்லை என்று காட்டுவதற்கு இன்றைய கூட்டம் உதவியாக இருக்கும். பிரதமர் மோடி இன்று நடக்கும் கூட்டத்தில் சீனாவுடன் உள்ள எல்லை பிரச்சனை பற்றி பேச வாய்ப்பு குறைவு.
என்ன பேசுவார்?
ஏனென்றால் அது இரு நாட்டு பிரச்சனை என்பதால் பன்னாட்டு கூட்டத்தில் பேச வாய்ப்பு குறைவு. மற்றபடி இந்த கூட்டத்திற்காக இந்தியா சில சிறப்பான திட்டங்களை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. பொருளாதாரம், பாதுகாப்பு, காலநிலை மாற்றம் பற்றி பிரதமர் மோடி பேச வாய்ப்புகள் உள்ளன. சர்வதேச தீவிரவாதம், எல்லை தாண்டிய தீவிரவாதம் பற்றி பிரதமர் மோடி இன்று பேச வாய்ப்புகள் உள்ளன. நேரடியாகவும், மறைமுகமாகவும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக பிரதமர் மோடி பேசும் வாய்ப்புகள் உள்ளன, என்று கூறப்படுகிறது.