மேல்மலையனூர்: விழுப்புரம் மாவட்டம், அவலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குந்தலம்பட்டு கிராமத்தை சேர்ந்த சின்னசாமி மகன் முருகன் (30), திருவண்ணாமலை மாவட்டம் செவரம்பூண்டி கிராமத்தை சேர்ந்த சின்னதுரை மகள் சந்தியா (22) ஆகியோருக்கு கடந்த 9ம் தேதி மணமகன் இல்லத்தில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. புதுமண தம்பதி திருப்பதி கோயிலுக்கு சென்றுவந்த பின், மணமகளை சொந்த ஊரான செவரம்பூண்டிக்கு மறுவீடு அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சந்தியா விஷம் அருந்தி மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். தகவலறிந்து மனைவியின் உடலை மருத்துவமனையில் பார்த்துவிட்டு இரவு முருகன் குந்தலம்பட்டு கிராமத்திற்கு திரும்பியுள்ளார். அங்கு தனது விவசாய நிலத்தில் இரவிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அவலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து புதுமண தம்பதிகள் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.