காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக யாருக்கெல்லாம் வாய்ப்பு?

வெளிநாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று நாடு திரும்ப உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை அவரே நியமிக்க வேண்டும் என்று கட்சிக்குள் குரல்கள் எழுந்துள்ளன.
ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு தற்போது கேரளாவில் இருக்கிறார். இந்நிலையில், மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு சென்றிருந்த காங்கிரஸ் இடைக்காலத்தலைவர் சோனியா காந்தி நாடு திரும்புகிறார். அவர் நாடு திரும்பியபின், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தலை நடத்தாமல் அவரே ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கட்சியின் முக்கிய தலைவர்கள் வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

image
ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட முன்வராவிட்டால், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கட்சியின் தலைவர் பதவிக்கு கெலாட் வந்தால், அடுத்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் நடக்கும் சட்டசபை தேர்தலில் அங்கு இளம் தலைவரான சச்சின் பைலட் முதல்வராக வாய்ப்பு கிட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அசோக் கெலாட் ராஜஸ்தான் முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க தயங்கினால் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தர பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக தெரிகிறது. மூத்தத் தலைவரான அவருடைய மகனுக்கு ராஜஸ்தான் அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கலாம் என திரைமறைவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பதவியை ஏற்க கெலாட் மறுத்தால் முகுல் வாஸ்நிக், காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.

image
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் சார்பாக சோனியா காந்தி மீண்டும் தலைவராக வேண்டும் அல்லது புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலியுறுத்தப்படும் என காங்கிரஸ் கட்சியின் டெல்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது. கேரளா, சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் இதற்கான தீர்மானங்களை நிறைவேற்றி கட்சியின் தேசிய தலைமைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிருப்தி குழுவில் இருந்தும் போட்டி எழக்கூடும் என்று தெரிகிறது. ஒருவேளை ராகுல் காந்தி தலைவர் பதவிக்கு போட்டியிட ஒப்புதல் தெரிவித்தால், வெளிப்படையாக அவருக்கு ஆதரவாக பல முக்கிய தலைவர்கள் அறிக்கை வெளியிடுவார்கள் எனவும் அத்தகைய சூழ்நிலையில், அதிருப்தி தலைவர்கள் தங்கள் சார்பாக வேட்பாளரை களம் இறக்க மாட்டார்கள் என்றும் தெரிகிறது.

இதையும் படிக்க: உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர முடியாது-மத்திய அரசுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.