கோவை: பாலியல் புகாரில் தேடப்படும் சினிமா தயாரிப்பாளர் வெளியிட்ட 3 நிமிட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் நல்லிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பார்த்தீபன் (30). சினிமா தயாரிப்பாளர். இவர் மீது சென்னை ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக பார்த்தீபன் ஆசைவார்த்தை கூறி, பொள்ளாச்சியில் வரவழைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் பார்த்தீபன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர். இந்நிலையில் பார்த்தீபன் வெளியிட்டுள்ள 3 நிமிட வீடியோவில், ‘‘என் மீது புகார் கொடுத்த பெண்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் நான் பண உதவி செய்துள்ளேன். அதை மறந்து என் மீது வேண்டுமென்றே புகார் கொடுத்துள்ளனர். மேலும் பணம் பறிக்கும் நோக்கில் புகார்கள் கொடுக்கப்பட்டு உள்ளது. இதனை நான் சட்டப்படி எதிர்கொள்வேன்’’ என கூறி உள்ளார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.