புதுச்சேரி: சொகுசு கார், ஆடம்பர வாழ்க்கை – ரூ.55 லட்சம் ஜிஎஸ்டி தொகையை சுருட்டிய மின்துறை ஊழியர்

புதுச்சேரி திப்புராயப்பேட்டையில் மின்துறை தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு மின்துறை கண்காணிப்பு பொறியாளர்கள் அலுவலகம், நிதி கட்டுப்பாட்டாளர், மின்கட்டணம் வசூல், பராமரிப்பு அலுவலக பணிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன. சில நாள்களுக்கு முன்பு நான்கு வருடங்களாக ஜி.எஸ்.டி செலுத்தாதது ஏன் என்று மின்துறைக்கு சம்மன் அனுப்பியிருக்கிறது ஜி.எஸ்.டி அலுவலகம். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மின்துறை அதிகாரிகள், உடனே விசாரணையில் இறங்கினர். தொடர்ந்து மின்துறை கணக்கு வைத்திருக்கும் வங்கியில் பண பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தனர். அப்போது மின்துறை கணக்கிலிருந்து லட்சக்கணக்கான பணம் வேறொரு வங்கிக் கணக்கிற்கு சென்று இருப்பது தெரிய வந்தது.

புதுச்சேரி

அதனால் உடனே மின்துறை அதிகாரிகள் ஓதியன்சாலை காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கிய போலீஸார், பண பரிவர்த்தனை நடைபெற்ற வங்கிக் கணக்கை ஆய்வு செய்தனர். அப்போது அந்த கணக்கு எண், மின்துறை அலுவலகத்தில் இளநிலை எழுத்தராக (எல்.டி.சி) பணிபுரியும் மூலகுளத்தை சேர்ந்த யோகேஷ் என்பவருடையது என்பது தெரிய வந்தது. அதனடிப்படையில் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பணத்தை தாம் கையாடல் செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் பல்வேறு தவணைகளில் கையாடல் செய்த அந்த பணத்தில் தனது கடன்களை அடைத்ததாகவும், சொகுசு கார்களை வாங்கியதாகவும் வாக்குமூலம் அளித்தார். அதையடுத்து அவரிடம் இருந்த இரண்டு கார்களையும் பறிமுதல் செய்த போலீஸார், வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.