பாட்னா: ஜன்னல் வழியாக செல்போனை திருட முயன்ற திருடனை, 10 கிமீ தூரத்துக்கு ‘அய்யோ சார்… மன்னிச்சி விட்டுங்க…’ என்று பயணிகள் கதற விட்ட சம்பவம் பீகாரில் நடந்துள்ளது. பீகார் மாநிலம், பெகுசராரி நகரில் இருந்து காகாரியாவுக்கு நேற்று புறப்பட்ட ரயில், சகேப்புர் கமல் என்ற ரயில் நிலையத்தில் நின்றது. அப்போது, ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த ஒரு பயணியின் செல்போனை, திருடன் ஒருவன் கையை விட்டு பறிக்க முயன்றான். ஆனால், உஷாரான பயணி, திருடனின் கையை பிடித்து கொண்டார். அதற்குள் ரயில் புறப்பட்டது. இருப்பினும், கையை அவர் விடவில்லை. ரயில் வேகம் எடுத்ததும், ஜன்னலுக்கு வெளியே தொங்கிய திருடன் அலற தொடங்கினான். ‘ஐயா, மன்னிச்சிடுங்க. கையை விடுங்க…’ என்று மன்றாடினான். ஆனால், பயணி விடவில்லை. அவருக்கு உதவியாக வந்த மற்றொரு பயணியும், திருடனின் மற்றொரு கையை ஜன்னலுக்கு உள்ளே இழுத்து பிடித்து கொண்டார். இரண்டு கைகளும் பயணிகளிடம் சிக்க, திருடன் தன்னை விட்டும்படி பீதியில் அலறி கொண்டே இருந்தான். இப்படியே 10 கிமீ தூரத்துக்கு ஓடும் ரயிலில் அவன் தொங்கி கொண்டிருந்தான். அடுத்த ரயில் நிலையத்தில்தான் பயணிகள் அவனை விட்டனர். உடனே, திருடன் ஓட்டம் பிடித்தான். ரயிலில் திருடன் தொங்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.