நடிகர்கள் : அருண் விஜய், பல்லக் லால்வானிஇசை : ஷபீர்இயக்கம் : ஜிஎன்ஆர் குமரவேலன்
சென்னை : நடிகர் அருண் விஜய்யின் யானை படத்தை தொடர்ந்து இன்றைய தினம் சினம் படம் வெளியாகியுள்ளது.
குமரவேலன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக அருண் விஜய் நடித்துள்ளார்.
யானை படத்தின் வெற்றி இந்தப் படத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு தகுந்தாற்போல இந்தப் படம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.
நடிகர் அருண் விஜய்
நடிகர் அருண் விஜய் தேர்ந்தெடுத்தக் கதைகளில் நடித்து வருகிறார். இவரது பல படங்கள் சிறப்பான வெற்றியையும் சில படங்கள் மினிமம் கேரண்டியுடனும் வெளியாகி தயாரிப்பாளர்களுக்கு வெகுவாக கைக்கொடுத்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது யானை படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
சிறப்பான யானை படம்
அருண் விஜய் கிராமத்து கெட்டப்பில் நடித்திருந்த யானை படத்தை அவருடைய மைத்துனர் ஹரி இயக்கியிருந்தார். முதல் முறையாக இணைந்த இந்தக் கூட்டணி, வெற்றிக் கூட்டணியாகவே அமைந்தது. படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் பிரியா பவானி சங்கர்.
அருண் விஜய்யின் சினம் படம்
இந்தப் படத்தை தொடர்ந்து இன்றைய தினம் அருண் விஜய் மற்றும் பல்லக் லால்வானி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகியுள்ளது சினம். இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக அருண் விஜய் நடித்துள்ளார். படம் பாசிட்டிவ் கமெண்ட்ஸை பெற்றுள்ளது. சினம் படம் இரண்டு ஆண்டுகள் கழித்து வெளியான போதிலும் ரசிகர்களை கவரும் வகையில் காட்சி அமைப்புகள் மற்றும் திரைக்கதையும் வெளியாகியுள்ளது.
என்ன கதை
ஷேர் ஆட்டோவில் பயணமாகும் பல்லக் லால்வானி, 4 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார். கொலையும் செய்யப்படுகிறார். இதையடுத்து அவரை அருண் விஜய்யின் உயரதிகாரி களங்கப்படுத்துகிறார். தொடர்ந்து தன்னுடைய மனைவியின் கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்கிறார் அருண் விஜய்.
மிடுக்காக போலீஸ் அதிகாரி
ஆனால் படத்தில் அருண் விஜய் மிகவும் கம்பீரமாக போலீஸ் கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல தனது கெட்டப்பை சிறப்பாக்கி நடித்துள்ளார். கிளீன் ஷேவுடன் அவரை பார்க்கும் போல மிகவும் அழகாக காணப்படுகிறார். அவருக்கு ஜோடியாகியுள்ள பல்லக் லால்வானி மிகவும் க்யூட்டாக வருகிறார்.
சிறப்பான திரைக்கதை
இயக்குநர் குமரவேலன் இந்தப் படத்தின்மூலம் சிறப்பான போலீஸ் கதையை கொடுக்க முயற்சித்துள்ளார். ஓரளவுக்கு வெற்றியும் கண்டுள்ளார். படத்தில் ஷபீர் இசையும் சிறப்பாக அமைந்துள்ளது. மொத்தத்தில் அதிகமான வன்முறை போன்றவை இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கும்வகையில் படம் அமைந்துள்ளது.
வரவேற்பை பெற்றுள்ள ஒளிப்பதிவு
படத்தின் ஒளிப்பதிவாளரும் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். படத்தின் டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்ட காட்சிகளில் அவரது உழைப்பு வெளிப்பட்டுள்ளது. சாதாரண நம் சினிமாவில் அதிகமாக எடுக்கப்பட்ட கதைக்களத்தில்தான் இந்தப் படமும் வெளியாகியுள்ளது. ஆனாலும் காட்சி அமைப்புகள், திரைக்கதை படத்திற்கு பலத்தை சேர்த்துள்ளது.
சமூக அக்கறை
பெண்கள் கடத்தல், பாலியல் பலாத்காரம் போன்றவற்றை மையமாக வைத்து வெளியாகியுள்ள இந்தப் படத்தில் ஒவ்வொருத்தரும் கோபப்பட வேண்டிய அவசியத்தையும் படம் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளது. இடைவேளைக்கு அடுத்த காட்சிகளில் படத்தை விறுவிறுப்பாக்கியுள்ளார் இயக்குநர்.
படத்தின் ப்ளஸ்கள்
அருண் விஜய்யின் மிடுக்கான நடிப்பு, சிறப்பான திரைக்கதை, ஒளிப்பதிவாளரின் சிறப்பான காட்சி அமைப்புகள், சிறப்பான பிஜிஎம், நாயகி பல்லக் லால்வானியின் க்யூட் நடிப்பு மற்றும் குழந்தை என இந்தப் படத்தில் அதிகமான ப்ளஸ்கள் காணப்படுகின்றன. நீண்ட நாட்களுக்கு பிறகு சமூக மெசேஜுடன் வெளியாகியுள்ள போலீஸ் கதை என்ற வகையில் இந்தப் படம் கவனத்தை ஈர்த்துள்ளது.
மெதுவாக நகரும் காட்சிகள்
ஆனால் முழு படமுமே ஸ்லோவாக நகர்வது படத்தின் மைனசாக பார்க்கப்படுகிறது. படத்தின் திரைக்கதை உள்ளிட்டவை கவனத்தை ஈர்த்து நம்மை படத்தோடு ஒன்ற வைக்கிறது என்றாலும் படத்தின் வேகமின்மை நம்முடைய பொறுமையை சோதிக்கிறது. மேலும் போலீஸ்துறை சம்பந்தமான காட்சிகளும் படத்தின் வேகத்தை மேலும் குறைக்கிறது.
குடும்பத்துடன் பார்க்கலாம்
மொத்தத்தில் சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் அதிகமான வன்முறை இல்லாததே படத்திற்கான பலம். இந்தப் படத்தை குடும்பத்துடன் சென்று பார்க்கும்வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. யானை படத்தை தொடர்ந்து இந்தப் படமும் அவருக்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.