யூடியூபர் சவுக்கு சங்கர் கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். நிர்வாக காரணங்களால் நள்ளிரவில் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார் என சிறைத்துறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையை சேர்ந்த யூடியூபர் சவுக்கு சங்கர். அவர் தனது ட்விட்டரில், ‘நீதித் துறை ஊழல் கறை படிந்திருக்கிறது’ என கருத்து பதிவு செய்தற்காக அவர் மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
ஏற்கெனவே இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்தில் ஆஜரான சவுக்கு சங்கர், `நீதிமன்ற அவமதிப்பு மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் தேவை. நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கை எடுத்ததற்கான காரணமாக குறிப்பிடும் வீடியோ பதிவுகள் மற்றும் பிற பதிவுகளை எனக்கு வழங்க வேண்டும்’ என்றார். மேலும் அவர், தான் கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன் என தெரிவித்தார். இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர் நேரில் ஆஜரானார்.
இந்த வழக்கில் அமிகஸ் கியூரியாக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் சோமயாஜி வாதிட்டார். தொடர்ந்து நேற்று மாலை நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டனர். இதனைத்தொடர்ந்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சவுக்கு சங்கர் மதுரை மத்திய சிறையில் இருந்து கடலூர் சிறைக்கு நள்ளிரவில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நிர்வாக காரணங்களுக்காக சிறை மாற்றம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது. யூடியூபர் சவுக்கு சங்கருக்கு அச்சுறுத்தல் அதிகம் உள்ள காரணத்தால் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என சிறைத்துறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM