தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் ‘வி கிரியேஷன்ஸ்’ கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியாகும் படம் ‘நானே வருவேன்’. இப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது. இதற்கு முன்பு இவர்களின் கூட்டணியில் உருவான ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘மயக்கம் என்ன’ போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில் தற்போது மீண்டும் இவர்கள் இணைந்து வெளியாகும் படம் ‘நானே வருவேன்’. இப்படத்தில் இந்துஜா மற்றும் பாலிவுட் நடிகை எல்லி அவ்ராமும் நடித்துள்ளனர். சில நாள்களுக்கு முன்பு ஒரு ஊடகத்திற்கு செல்வராகவன் அளித்த பேட்டியில், ‘நானே வருவேன்’ படத்தின் திரைக்கதையை அவரும், தனுஷும் சேர்ந்து உருவாக்கியதாக கூறியிருந்தார்.
இப்படத்தின் டீசர் காட்சிகள் அனைத்தும் ஹாலிவுட் தரத்தில் உள்ளது. இந்த டீசரில் தனுஷ் வசனம் ஏதும் பேசவில்லை, ஆனால், அவரின் முக பாவனையும், நடிப்பாற்றலும் ரசிக்கும்படி இருக்கிறது. டீசரில் பரட்டை தலையுடனும், வாரிய தலையுடனும் என இரு வேடங்களில் தனஷை காண முடிகிறது. டீசர் முடிவில் இருவரும் சந்தி்த்து கொள்ளும்படி அமைந்திருக்கும் காட்சி அற்புதமாக அமைந்துள்ளது.
தனுஷின் அசுர நடிப்பு வெறித்தனமாக இருக்கிறது. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை ஏற்று, தன் வசம் கொண்டு நடிப்பதில் தனுஷ் ஒரு அசுரன். பின்னணி இசைக்கு ஏற்றவாறு தனுஷ் ஆடும் நடனம், ‘காதல் கொண்டேன்’ படத்தின் இறுதியில் தனுஷின் ஆட்டம் நினைவுக்கு வருகிறது. ஒரு காட்சியில் செல்வராகவன் கையில் துப்பாக்கியுடன் பயங்கரமாக ஓடி வரும் காட்சி பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைக்கிறது. செல்வராகவன் இயக்குநரில் இருந்து தற்போது நடிகராகவும் வலம் வருகிறார். யுவனின் பின்னணி இசை பயத்தையும், குழப்பத்தையும் உணர செய்கிறது. படத்தின் டீசர் முழுவதும் நடு காட்டில் இருப்பதால் அதன் அழகு படத்தின் தரத்தை உயர்த்துகிறது.
தற்போது, இரண்டு கோடி பார்வையாளர்களை தாண்டி, ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் டீசர் யூ-ட்யூப்பில் டிரெண்டிங் நம்பர் 1-இல் நீடிக்கிறது.