செப்டம்பர்-16.. இன்று உலக ஓசோன் தினம் என்று, ஐநா சபையால் அறிவிக்கப்பட்ட தினம். இந்நாள் வெறுமனே வலைப்பேச்சுகளிலும், பக்கம் பக்கமாக கட்டுரைகளிலும் ‘விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன்’ என்ற போர்வையின் கீழ் வெறும் எண்ணாக மட்டுமே ஒளிந்திருக்கிறதே தவிர நடைமுறையில், இதுவும் பிற நாட்களைப் போல் எளிதில் கடந்து விடக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது.
ஓசோன் படலத்தின் பயன் அனைவரும் அறிந்ததே. சூரியனிலிருந்து வரும் புறஊதாக்கதிர்களை வடிகட்டி பூமிக்கு அனுப்பும் பணியினைச் செய்கிறது. கடந்த சில மாதங்களாக ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக இங்கிலாந்தில், 40 முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது.
இது குறித்து எழுத்தாளரும் சூழல் ஆர்வலருமான அ.முத்துகிருஷ்ணனிடம் பேசியபோது,
“மனிதர்களின் நடத்தையால் தான் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுகிறது. தொடர்ந்து வளர்ச்சி என்கிற பெயரில் நாம் வெளியிட்டுள்ள வாயுக்கள் நம்முடைய பொறுப்பற்றத்தனத்தையே காட்டுகிறது. துரித வளர்ச்சி தான் நம்மை இந்த நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இன்று நாம் சந்திக்கும் பருவநிலை மாற்றம் என்பது நம்முடைய தொழிற்சாலைகளின் கழிவுகளாலும், காடுகளை கட்டுபாடுகளின்றி அழித்ததாலும் ஏற்படும் விளைவுகளே..
ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான வியன்னா ஒப்பந்தம், மான்ட்ரியல் நெறிமுறைகள் என பல விஷயங்களை தொடர்ந்து உலக நாடுகள் பேசினாலும் அதனை அமல்படுத்துவதில் வளர்ந்த நாடுகள் நடைமுறைகளை கடைப்பிடிப்பதில்லை. மாறாக வளர்ந்த நாடுகள் மூன்றாம் உலக நாடுகளுடன் கரியமில பேரத்தில் ஈடுபட்டு வருவது வேதனையான விசயம். அதே நேரத்தில் வள்ரந்த நாடுகள் பெரும் தொழிற்சாலைகளை தங்கள் நிலத்தில் மூடிவிட்டு அவைகளை மூன்றாம் உலக நாடுகளில் திறப்பதும் தீர்வின் ஒரு பகுதியாக அல்லாமல் பிரச்சனையை மடைமாற்றும் ஒரு உத்தியாகவே உள்ளது” என்று அவர் கூறினார்.
இதே நிலை தொடருமாயின், இங்கிலாந்தின் வரிசையில் இந்தியாவும், விரைவில் இடம்பெறும். அதிக வெப்பம் மட்டுமின்றி, இன்னபிற இயற்கை சார்ந்த இன்னல்களையும் எதிர்கொள்ள நேரிடும்…!
இதற்கான தீர்வு , வாகன பயன்பாட்டைக் குறைப்பது, கரியமில வாயுவை வெளியிடும் சாதனங்களைக் குறைத்துக்கொள்வது, மரங்களை அதிளவு வளர்ப்பது என எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான்…
ஆனால் இதுபோன்ற கட்டுரைகளில் படிப்பது, ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதோடு கடந்து போய்விடாமல் களத்தில் நடைமுறைப்படுத்துவதே மனிதர்களாகிய நமது கடமையாக இருத்தல் வேண்டும்” என்றார்.