“இப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க தயாராகி விட்டனர்” என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நடிகை விந்தியா ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “ஜெயலலிதா இருந்தவரை பயந்து நடுங்கி இருந்த திமுகவினர், ஜெயலலிதா இறந்த பின்பு பயமில்லாமல் எல்லா தப்புகளையும் செய்கிறார்கள்.
`துன்பம் தாங்க முடியாமல் டாஸ்மாக் கடைக்கு சென்று சரக்கு வாங்கி அடித்தால் அதுவும் ஏறவில்லை. அதிமுக ஆட்சியில் கட்டிங் வாங்கி அடித்தால் போதை ஏறும் – ஆனால் திமுக ஆட்சியில் 3 கட்டிங் அடித்தாலும் போதை ஏறவில்லை’ என மக்கள் குமுறுகிறார்கள். இது அரசு சரக்கு கிடையாது. திமுக அரசு நின்றால் வரி, நடந்தால் வரி, உட்கார்ந்தால் வரி என அனைத்துக்கும் வரி போடுகிறது.
ஸ்டாலின் தினமும் போட்டோஷூட்டிங் மட்டுமே நடத்தி வருகிறாரே தவிர, மக்கள் திட்டங்கள் எதும் நடப்பதில்லை. திமுக ஆட்சியில் பட்டாசு ஆலைகளில் ரைடு மட்டுமே நடைபெறுகிறது. பட்டாசு தொழில் செய்பவர்கள் மதுபானம் விற்பவர்கள் போலவும் ஆன்லைன் சூதாட்டம் நடத்துபவர்கள் போலவும் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்.
விடியல் தரப் போராரு என்று பாட்டு மட்டும் போட்டார்கள் தவிர தற்போது வரை விடியல் தரவில்லை. திமுக ஆட்சியில் மக்கள் சந்தோஷமாக இல்லை. சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களை பார்க்க முடியவில்லை . முதலமைச்சரை சுற்றி 5 பேர் கொண்ட வளையம் இருக்கிறது. அவரை மக்கள் எளிதில் அணுக முடியவில்லை.
ஒரே தேர்தல் என டாடி மோடி சொல்லிக் கொண்டிருக்கிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தல் தனியாக வந்தாலும் சரி சட்டமன்ற தேர்தல் சேர்ந்து வந்தாலும் சரி… ஏதோ ஒன்று நடக்கப் போகிறது. இப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க தயாராகி விட்டனர்” என பேசினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM