சென்னை: கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான விதிமீறல் என்று கூறி திமுக எம்எல்ஏ எழிலன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணையை 3நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி உத்தர விட்டுள்ளார்.
இந்தியாவில் 1975 முதல் 1977 வரையிலான இந்திராகாந்தி தலைமையிலான ஆட்சி காலத்தில், பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. குறிப்பாக எமர்ஜென்சி எனப்படும் காலக்கட்டத்தில், பல்வேறு விதிமீறல்களும், சட்ட திருத்தங்களும் செய்யப்பட்டன. மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்பட்டு, மத்தியஅரசுக்கு வழங்கப்பட்டது. அப்போது, பல மாநில அரசின் சில அதிகாரங்கள் பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது. காடுகள் நிர்வாகம், கல்வி, எடை மற்றும் அளவிடல், விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாப்பு, நீதி நிர்வாகம் ஆகியவை மாநில கட்டுப்பாட்டில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதுபோல முக்கிய 5 பொது துறைகள் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது.
இதன் காரணமாகவே தற்போது மாநில அதிகாரத்தில் மத்தியஅரசின் தலையீடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கல்வி, மாநிலங்களுக்கு எதிராக தேசிய தேர்வுகள், நுழைவு தேர்வுகள் கொண்டு வந்துள்ளதுடன், தேசிய கல்விக்கொள்கையையும் அமல்படுத்த முயற்சிக்கிறது. மத்தியஅரசின் இந்த முயற்சிகளுக்கு தமிழகஅரசு உள்பட பல்வேறு மாநிலங்கள் போர்க்கொடி தூக்கி உள்ளன.
இதுதொடர்பாக, ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., டாக்டர் எழிலன் நடத்திவரும் அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவரது மனுவில், கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மத்திய அரசு மாற்றி சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. மிகப்பெரிய விதிமீறலாகும்.
இந்தியாவில் 1975-ம் ஆண்டு முதல் 1977-ம் ஆண்டு வரையிலான நெருக்கடி நிலை காலத்தில், பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. முக்கியமாக மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்பட்டு, மத்திய அரசு பல அதிகாரங்களை எடுத்துக் கொண்டது. அதன்படி, மத்திய அரசு கல்வியை பொதுபட்டியலுக்கு மாற்றியதால், நீட் தேர்வுகள், புதிய தேசிய கல்விக்கொள்கை போன்ற சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. எனவே, இந்த சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், மனு தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்து, இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
45 வருடங்களுக்கு முன் கொண்டு வரப்பட்ட இந்த மாற்றத்திற்கு எதிராக தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. திமுக எம்எல்ஏவின் அறம் செய்ய விரும்பு அறக்கட்டளையில் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிடி செல்வன், அக்பர் அலி, மூத்த பத்திரிக்கையாளர் ஏஎஸ் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் உறுப்பினர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இதுபோன்ற ஒரு வழக்கை 1973ம் ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சிக்ரி தலைமையிலான 13 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, நாடாளுமன்றத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து முயன்றாலும், வாக்களித்தாலும் கூட அரசியலமைப்புச் சட்டங்களை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் மாற்றம் செய்ய முடியாது என்று அதிரடியாக தீர்ப்பு கூறியிருந்தது. இந்த தீர்ப்பை சுட்டிக்காட்டி கல்வியை பொது பட்டியலுக்கு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.