செங்கல்பட்டு: ” கமிசன், கலெக்சன், கரெப்சனிலும் திராவிட மாடல். தமிழகத்தில் லஞ்சம் இல்லாத துறையே இல்லை. பல்வேறு கூட்டங்களில், தற்போதைய முதல்வர் அதிமுகவை விமர்சனம் செய்கிறார். 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் நடைபெறவில்லை என்று தவறான தகவலை பரப்பி வருகின்றார்” என்று அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்து, அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த போராட்டத்தில் கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியது: ” திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 15 மாதங்களாகிறது. இந்த 15 மாத காலத்தில் ஒரு நுனி அளவுகூட நாட்டு மக்களுக்கு நன்மை கிடைக்கவில்லை. 15 மாத சர்வாதிகார ஆட்சியில், மக்களுக்கு வேதனையும், துன்பமும் மட்டும்தான் மிஞ்சியது.
பேரூராட்சி, மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமங்களில் இருக்கும் வீடுகளுக்கும் கடைகளுக்கும் வரியை உயர்த்தி இருக்கின்றனர். நூறு சதவீதம் வீட்டு வரியை உயர்த்தியுள்ளனர். இதற்குமுன் ஆயிரம் ரூபாய் வீட்டு வரி செலுத்திக் கொண்டிருந்தால், இப்போது இரண்டாயிரம் ரூபாய் வீட்டு வரி செலுத்த வேண்டும். கடை வைத்திருப்பவர்கள் 1000 ரூபாய் செலுத்தியிருந்தால், இப்போது 2500 ரூபாய் செலுத்த வேண்டும். 150 சதவீதம் வரி உயர்த்தப்பட்டிருக்கிறது.
கூரை வீட்டை விட்டுவைக்கவில்லை. கூரை வீட்டிற்கு சதுர அடிக்கு 30 பைசா வரி உயர்த்தப்பட்டுள்ளது. வசூல் செய்வதில் தற்போது ஆட்சி செய்யும் முதல்வர் ஸ்டாலின் மன்னன். கூரை வீட்டிற்கெல்லாம் வரி போடுவது வேதனையளிக்கிறது. மக்கள் மீது வரியை சுமத்தி அவர்களை உறிஞ்சுவதுதான் திமுக அரசு, இதுதான் திராவிட மாடல்.
கமிசன், கலெக்சன், கரப்சனிலும் திராவிட மாடல். தமிழகத்தில் லஞ்சம் இல்லாத துறையே இல்லை. பல்வேறு கூட்டங்களில், தற்போதைய முதல்வர் அதிமுகவை விமர்சனம் செய்கிறார். 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் நடைபெறவில்லை என்று தவறான தகவலை பரப்பி வருகின்றார்.
எம்ஜிஆர், ஜெயலலிதாவைத் தொடர்ந்து, மக்களின் துணையுடன் 4 ஆண்டுகாலம் 2 மாத காலம் சிறப்பான ஆட்சியை நான் கொடுத்தேன். 32 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டு அத்திட்டங்களின் மூலம் மக்கள் அதிகமான நன்மைகளைப் பெற்றனர்” என்று அவர் கூறினார்.
முன்னதாக, மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.