சமர்கண்ட்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டையொட்டி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த வேளையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் காதில் ஹெட்போன் நிற்காமல் கீழே விழுந்து கொண்டே இருந்ததால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மேடையிலேயே குபீரென சிரித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்தியா, சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக இருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கடந்த 2001ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் ஈரான், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், மங்கோலியா ஆகிய நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன.
இந்த அமைப்பு சார்பில் பிராந்தியம் மற்றும் சர்வதேச பிரச்சனைகள் குறித்து விவாதம் நடத்தப்படும். மேலும் வர்த்தகம், பரஸ்பர உறவு, பொருளாதாரம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து நாட்டு தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்
பிரதமர் மோடி பங்கேற்பு
இறுதியாக தலைவர்கள் அனைவரும் பங்கேற்ற மாநாடு கடந்த 2019ம் ஆண்டில் கிர்கிஸ்தானில் நடந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் ஏற்பட்டது. இந்நிலையில் தான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 22வது உச்சிமாடு உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நேற்று தெடாங்கியது. இன்று உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி விமானத்தில் உஸ்பெகிஸ்தான் சென்றார். இதேபோல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜிங்பின் உள்பட பிற நாட்டு தலைவர்கள் உஸ்பெகிஸ்தான் சென்றுள்ளனர்.
பாகிஸ்தான்-ரஷ்யா பேச்சுவார்த்தை
இந்நிலையில் தான் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் -ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் பரஸ்பரம் சந்தித்து இருநாடுகளின் உறவு பற்றி விவாதித்தனர். இந்த வேளையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை பார்த்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சிரித்த வீடியோ ஒன்று இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
கீழே விழுந்த ஹெட்போன்
அதாவது இருநாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தையின்போது அவர்களுக்கு இடையே கருத்து பரிமாற்றத்தில் குளறுபடி ஏற்படாமல் தடுக்கும் வகையில் அவர்கள் இருவரும் ஹெட்போன் பயன்படுத்துவது வழக்கம். அந்த வகையில் தான் நேற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் -ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் ஹெட்போன் பயன்படுத்தினர். அப்போது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது காதில் ஹெட்போன் பொருத்தினார். அது சரியாக பொருந்தவில்லை. இதனால் கீழே விழுந்தது. இதையடுத்து அவர் அருகே இருந்த ஒருவர் வந்து ஷெபாஸ் ஷெரீப் காதில் ஹெட்போன் மாட்டினார். அப்போதும் அது கீழே விழுந்தது.
சத்தமாக சிரித்த புதின்
இதனை எதிரே அமர்ந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பார்த்து கொண்டிருந்தார். ஹெட்போன் தொடர்ந்து கீழே விழுந்ததால் சிரிப்பை அடக்கிய அவர் ஒரு கட்டத்தில் சிரிப்பை அடக்க முடியாமல் லேசாக தலையை திருப்பி சத்தமாக சிரித்தார். அவரது சிரிப்பு சத்தம் மைக்கில் பதிவானது. இது ஷெபாஸ் ஷெரீப்புக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
கிண்டல்- கண்டனம்
இதற்கிடையே பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் காதில் இருந்து இயர்போன் கழன்று விழும் வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் சிலர் அவருக்கு ஆதரவாகவும், சிலர் அவருக்கு எதிராகவும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் கட்சியான தெக்ரிக் இ இன்சாப்பும் இந்த வீடியோவை பகிர்ந்து, ‛‛இயர்பேனை காதில் மாட்ட தெரியாத நபர் பாகிஸ்தான் பிரதமராக உள்ளார்” என விமர்சனம் செய்துள்ளது. மேலும் விளாடிமிர் புதினின் செயலுக்கும் சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.