கூலிப்படையை ஏவி தாக்க முயன்றவரை உடனடியாக கைது செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வெங்கங்குடி கிராமத்தைச் சேர்ந்த சுதர்சன் மற்றும் பாரதிராஜா ஆகியோருக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இதன் காரணமாக பாரதிராஜா அவ்வப்போது மது அருந்திவிட்டு வந்து சுதர்சன் வீட்டின் முன்பு நின்று தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு மீண்டும் மது போதையில் வந்த பாரதிராஜா, சுதர்சனை வசைபாடியுள்ளார். அப்போது தட்டிக்கேட்ட சுதர்சனை பாரதிராஜா, அவரது சகோதரர் ஆனந்த் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீடு புகுந்த தாக்க முயன்றுள்ளனர்.
இதனால் உயிருக்கு பயந்த சுதர்சன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து சுதர்சன் மனைவி சத்திய ஜோதி அளித்த புகாரின்பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் ஆனந்த் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் பாரதிராஜா தலைமறைவானார். இந்நிலையில் கூலிப்படையை ஏவி விட்ட பாரதிராஜாவை உடனடியாக கைது செய்யக்கோரி நேற்றிரவு வெங்கங்குடி கிராம மக்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தலைமறைவாக உள்ள பாரதிராஜாவை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மறியலில் ஈடுபட்டவர்களிடம உறுதியளித்ததை அடுத்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM