கொள்ளிடம்: மயிலாடுதுறை அருகே எம்ஜிஆர் அரசு கலைக்கல்லூரியில் மாணவனுக்கு வழங்கிய மாற்று சான்றிதழில் பிறந்த தேதி மற்றும் மாதம் தவறாக இருப்பதால் மேல் படிப்புக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரில் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் இளங்கலை மூன்றாமாண்டு கலை, அறிவியல் மற்றும் கணித பட்ட வகுப்புகளும், முதுகலை பட்ட வகுப்புகளும் இயங்கி வருகிறது.
இந்த கல்லூரியில் கடந்த 2019ம் ஆண்டு மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கிராமம் மேல தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவரது மகன் ராஜேஷ், தமிழ் இலக்கியத்தில் மூன்றாமாண்டு பட்ட வகுப்பில் சேர்ந்து படித்து தேர்ச்சி அடைந்தார். இவரது மூன்றாண்டு பட்ட வகுப்பு கடந்த ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் ராஜேஷ், புத்தூர் எம்ஜிஆர் அரசு கலைக்கல்லூரிக்கு நேற்று நேரில் வந்து அலுவலகத்தில் மாற்று சான்றிதழை வாங்கினார். ஆனால், அதில் அவர் பிறந்த தேதி பிளஸ் டூ மாற்று சான்றிதழில் குறிப்பிட்டிருந்த உண்மையான தேதி 07.5.2002 என்பதற்கு பதிலாக 05.07.2002 என்று குறிப்பிட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ராஜேஷ் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் சான்றிதழை சரிபார்த்தபோது, மாற்று சான்றிதழில் தேதி, மாதம் மாற்றலாகி உள்ளது தெரியவந்தது. தொடர்ந்து உரிய திருத்தம் செய்து உண்மையான பிறந்த தேதி குறிப்பிட்டு மீண்டும் மாணவனுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்று சான்றிதழில் பிறந்த தேதி மற்றும் மாதம் மாற்றப்பட்டுள்ளதால் உடனடியாக வேறு கல்லூரியிலோ அல்லது வேறு நிறுவனங்களிலோ தற்போது மாணவன் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.