புதுச்சேரி வாட்ஸ்-அப் குழுக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முன்பு பேசிய வீடியோ வைரலானது. அந்த வீடியோவில், “ஹாய் பிரண்ட்ஸ், ஃபேஸ்புக்கில் எனக்கு ஒரு பிரண்ட் மெசேஜ் செய்து, வீடியோ கால் செய்து நான் முழு நிர்வாணமாக இருந்தேன். அந்த வீடியோவை எனக்கே அனுப்பி மிரட்டி என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறான். அதனால் நான் சாகப் போகிறேன். அவர் நம்பரை உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன். அவனை விட்டுடாதீங்க ப்ரோ..” என்று முடிகிறது. அதையடுத்து அந்த இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அந்த வீடியோவில் பேசிய இளைஞர் சந்துரு, புதுச்சேரி, வில்லியனூர் பகுதியைச் சேர்ந்தவர். திருமணமாகாத அவர், சமீப நாட்களாக செல்போனில் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்-அப்பில் அதிக நேரம் செலவிட்டிருக்கிறார். அறையை சாத்திக்கொண்டு தனியாக பேசி வந்திருக்கிறார். அப்படி நேற்று முன் தினம் இரவும் தனது வீட்டு வாசலில் தனியாக அமர்ந்து சாட்டிங் செய்து கொண்டிருந்திருக்கிறார். அதையடுத்து நேற்று அதிகாலை சுமார் 1.30 மணிக்கு அந்த இளைஞரின் சகோதரர் இயற்கை உபாதைக்காக கண் விழித்திருக்கிறார்.

அப்போது வீட்டிற்கு வெளி வெளியே உள்ள கொய்யா மரத்தில் சந்துரு நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தொங்கிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோனார். அதையடுத்து அவரின் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த சந்துருவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். அதையடுத்து உயிரிழந்த சந்துருவின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் வில்லியனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து சந்துருவின் நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகளில் ஒருவர், “பெண் புகைப்படத்துடன் ஃபேஸ்புக்கில் வந்த போலி ஐடியுடன் நட்பான சந்துரு, அந்த நபருடன் பேசி வந்திருக்கிறார். அதன்பிறகு வாட்ஸ்-அப் மூலம் வீடியோ காலில் நிர்வாணமாக பேசி வந்திருக்கிறார். அந்த வீடியோவை ஸ்க்ரீன் ரெக்கார்டிங் செய்து சந்துருவுக்கே அனுப்பி பணம் கேட்டு மிரட்டியிருக்கின்றனர். அதனால்தான் அவர் தற்கொலை முடிவை எடுத்திருக்கிறார். சந்துருவின் போனை சைபர் க்ரைம் பிரிவுக்கு அனுப்பியிருக்கிறோம். விரைவில் குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்வோம்” என்றார்.