சமர்கண்ட்: ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உலகின் மிகப்பெரும் பொருளாதார நாடுகளில் வேகமாக வளரும் பொருளாதாரமாக நாங்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பேசினார். மேலும் ‘இந்தியா உற்பத்தி மையமாக மாற நாங்கள் விரும்புகிறோம்’ என்றும் அவர் பேசினார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி நேற்று உஸ்பெகிஸ்தான் சென்றார்.
அங்கு பிரதமர் மோடிக்கு சிறப்பான உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு
உஸ்பெகிஸ்தானில் இருக்கும் சமர்கண்ட் நகரத்தில் இந்த கூட்டம் நடந்து வருகிறது. முதன்முதலாக கடந்த 2001ஆம் ஆண்டு இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. இதில், ரஷ்யா, சீனா, இந்தியா, கஜகஸ்தான் உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாகவும், ஆப்கானிஸ்தான், ஈரான், மங்கோலியா உள்ளிட்ட நாடுகள் பார்வையாளர்களாகவும் இருந்து வருகின்றன. தற்போது நடக்கும் இந்த மாநாடானது உலக அளவில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
முக்கியத்துவம் பெற்ற கூட்டம்
குறிப்பாக கொரோனாவுக்கு பின்னர் இந்த கூட்டம் நடைபெறுவதாலும், உக்ரைன் -ரஷியா போர் ஒரு புறம் நடைபெற்று வரும் நிலையில், இந்த கூட்டம் நடைபெறுவதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. உக்ரைன் போருக்கு பின்பாக பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் கலந்து கொள்ளும் முக்கியமான முதல் கூட்டம் இது. மேலும் இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி என்ன பேசுவார் என்பதும் பலரும் ஆவலாக எதிர்பார்த்து வருகின்றனர்.
புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவு
இந்த நிலையில் கூட்டம் தொடங்கியதும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:- கொரோனா பெருந்தொற்று மற்றும் உக்ரைன் சூழல் ஆகியவற்றால் சர்வதேச அளவிலான விநியோக சங்கிலியில் தடைகள் ஏற்பட்டுள்ளன. இதன் விளைவாக உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு போன்ற துறைகளில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இந்தியா உற்பத்தி மையமாக மாற நாங்கள் விரும்புகிறோம். மக்களை மையமாக கொண்ட வளர்ச்சியில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். ஒவ்வொரு துறையிலும் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்.
மகிழ்ச்சியளிக்கிறது
இந்தியாவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. நடப்பு ஆண்டு இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.5 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிகப்பெரும் பொருளாதார நாடுகளில் வேகமாக வளரும் பொருளாதாரமாக நாங்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
வலுவான விநியோக அமைப்பை
வலுவான விநியோக அமைப்புக்கு சிறந்த கனெக்டிவிட்டி மற்றும் பரிமாற்றங்கள் தொடர்பான உரிமை ஒருவொருக்கொருவர் வழங்குவது முக்கியமானது. எனவே, நமது பிராந்தியத்தில் வலுவான விநியோக அமைப்பை உருவாக்க ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு முயற்சிக்க வேண்டும்.