ஐதராபாத்: டெல்லி மதுபான வழக்கு விவகாரம் ெதாடர்பாக அமலாக்கத்துறை இன்று ஐதராபாத்தில் சில இடங்களில் ரெய்டு நடத்தி வருகிறது. டெல்லி அரசின் மதுபான கொள்கை விவகாரம் தொடர்பாக மதுபான சிண்டிகேட் வியாபாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ, அமலாக்கத்துறை அமைப்புகள் சோதனை நடத்தியும், விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றன. டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில் டெல்லி மதுபான ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை தனது விசாரணையை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை முதல் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரின் முக்கிய இடங்களில் டெல்லியை சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் 40 இடங்களில் அதிகாரிகள் ரெய்டு நடத்துகின்றனர். முன்னதாக சிபிஐ போட்ட எப்ஐஆர் அடிப்படையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே விவகாரம் தொடர்பாக ஏற்கனவே ஐதராபாத் நகரில் இரண்டு முறை சோதனை நடத்தியது. தற்போது மூன்றாவது முறையாக இன்று சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சோதனையின் போது ராமச்சந்திர பிள்ளையின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.