சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அடுத்த வாரம் கூடும்

இலங்கையிலுள்ள சிறுவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களைத் தொடர்புபடுத்தி சிறுவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உருவாக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் எதிர்வரும் 21ஆம் திகதி கூடவுள்ளது.

சிறுவர்களின் நல்வாழ்வுக்கான கொள்கைகளை மாற்றம் செய்வது அல்லது புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்துவது மற்றும் சகல சிறுவர்களினதும் நல்வாழ்வு குறித்த கொள்கைகளை தொடர்ந்தும் மறுஆய்வு செய்வது, சிறுவர்களுக்காகப் பணியாற்றும் பல்வேறு அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்படுவது மற்றும் சிறுவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து அரசாங்க நிறுவனங்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கச் செய்வது என்பன இந்த ஒன்றியத்தின் பிரதான நோக்கங்களாகும்.

இதனைவிடவும், சிறுவர் உரிமைகள் குறித்து பிரசாரங்களை முன்னெடுப்பதற்கும், சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் அவற்றைக் கண்காணிப்பதற்கும் சிறுவர் தொடர்பில் காணப்படும் சட்டத்தை மறுசீரமைப்பது மற்றும் திருத்தம் செய்வது, தேவையான நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக் கொள்வதற்காகச் செயற்படுவது, சிறுவர்களின் உரிமைகளைப் பலப்படுத்தி அதன் ஊடாக அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல், அவை குறித்துக் காணப்படும் சவால்களுக்கு முகங்கொடுக்க அரசாங்க, சிவில் சமூக அமைப்புக்களின் வளங்களை ஒன்றிணைப்பது போன்ற விடயங்களும் இதன் ஊடாக எதிர்பார்க்கப்படுகின்றன.

இலங்கையிலுள்ள மொத்த சிறுவர்களுக்கும் தரமான ஆரம்ப, இடைநிலை மற்றும் மூன்றாம் நிலைக் கல்வி, போதுமான சுகாதாரப் பாதுகாப்பு, வன்முறைகள், துஷ்பிரயோகங்கள், புறக்கணிப்பு மற்றும் சுரண்டல்களிலிருந்து பாதுகாத்து, உரிய ஊட்டச்சத்தைப் பெற்றுக் கொள்வதற்கான அணுகலை உறுதிசெய்தல் போன்ற அவர்களில் தாக்கம் செலுத்தும் தீர்மானங்களை எடுக்கும்போதான பங்களிப்புக்கான வாய்ப்புக்களை உறுதிப்படுத்தல், பாரபட்சமின்றி சகல சிறுவர்களும் முழுமையான வளர்ச்சியை அடைவதற்கான பங்களிப்பைச் செலுத்துவதும் இதன் நோக்கங்களாகும்.

சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே அவர்களின் தலைமையில் ஏழாவது பாராளுமன்றத்தில் உருவாக்கப்பட்டிருந்ததுடன், எட்டாவது பாராளுமன்றத்திற்காக இது 2015 டிசம்பர் 03ஆம் திகதி உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த ஒன்றியம் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக முதல் முதலில் கூடவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.