குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட முத்துக்குமரனின் உடல் திருச்சி வந்தது..அமைச்சர்கள் அஞ்சலி

குவைத்: சுட்டுக் கொல்லப்பட்ட முத்துக்குமரனின் உடல் குவைத்தில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அவரது சகோதரரிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழக அமைச்சர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் முத்தக்குமரன் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் உள்ள லெட்சுமாங்குடி-கொரடாச்சேரி பிரதான சாலை தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன். 40 வயதான இவர் கூத்தாநல்லூர் பகுதியில் பழம் மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு வியாபாரம் கைகொடுக்காததால் தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக ஒன்றரை லட்ச ரூபாய் கடன் வாங்கி வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்பும் ஏஜெண்டு மூலம் இம்மாதம் 3ஆம் தேதி குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றார்.

கடந்த 6 ஆம் தேதி லெட்சுமாங்குடியில் உள்ள தனது மனைவி வித்யாவிடம் ஃபோனில் பேசிய முத்து தனக்கு கடினமான வேலை கொடுப்பதாக தெரிவித்தார்.

பாலைவனத்தில் வேலை

இந்நிலையில் குவைத்தில் தனக்கு கிளா்க் வேலை அல்லது சேல்ஸ்மேன் வேலை கிடைக்கும் என்று எதிர்பார்த்துச்சென்ற முத்துகுமரனை குவைத்தில் அவரை வேலைக்கு அமர்த்திய முதலாளி ஒட்டகம் மேய்க்குமாறு கூறியுள்ளார். அதற்கு முத்துக்குமார், ஒட்டகம் மேய்க்கும் வேலை செய்ய தனக்கு கஷ்டமாக உள்ளதாகவும், இதனால் தனது சொந்த ஊருக்கு செல்ல விரும்புவதாகவும் கூறியுள்ளார் முத்துக்குமரன்.

சுட்டுக்கொலை

சுட்டுக்கொலை

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த முதலாளி, முத்துக்குமரனை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் முத்துக்குமரன் ஊருக்கு திரும்புவதற்காக முயற்சி செய்து உள்ளார். இதை அறிந்த அந்த முதலாளி முத்துக்குமரனை துப்பாக்கியால் சுட்டு கொன்றதாக தகவல்கள் வெளியானது. இதை அறிந்த முத்துக்குமரன் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

 குடும்பத்தினர் அதிர்ச்சி

குடும்பத்தினர் அதிர்ச்சி

குவைத் நாட்டில் உயிரிழந்த முத்துக்குமரனின் உடலை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க கோரி அவரது தந்தை ராஜப்பா கடந்த 9 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார். இந்நிலையில் 13 ஆம் தேதி முத்துகுமரனின் படுகொலைக்கு நீதி கேட்டும், இதற்கு காரணமாக குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் அவரது குடும்பத்தினர் மற்றும் கூத்தாநல்லூர் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முத்துக்குமரன் உடலை மீட்டுத்தர கோரிக்கை

முத்துக்குமரன் உடலை மீட்டுத்தர கோரிக்கை

முத்துக்குமரனின் மனைவி வித்தியா கூத்தாநல்லூர் வட்டாட்சியரிடம் தனது கணவரின் உடலை மீட்டு தர கோரி கண்ணீர் மல்க கோரிக்கை மனுவை அளித்தார். இதனிடையே முத்துக்குமரனுடைய முதலாளியின் இரண்டாவது மகன் குவைத் நாட்டில் போலீஸ் அதிகாரியாக வேலை பார்த்து வந்ததாகவும் அந்த போலீஸ் அதிகாரி முத்துகுமரனை துப்பாக்கியால் சுட்டு கொன்றதாகவும் தகவல்கள் வெளியானது.

4 பேர் கைது

4 பேர் கைது

இந்த நிலையில் குவைத்தில் முத்துக்குமரன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் குவைத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகன், ஆந்திராவை சேர்ந்த ஏஜெண்டு மோகனா, உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஏஜெண்டு ஒருவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட முத்துக்குமரன் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று குவைத்தில் நடந்தது. இதில் குவைத்தில் உள்ள தமிழர்கள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் முத்துக்குமரன் உடல் விமானம் மூலம் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

திருச்சி வந்த முத்துக்குமரன் உடல்

திருச்சி வந்த முத்துக்குமரன் உடல்

முத்துகுமரனின் உடல் இன்று பிற்பகல் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் முத்துக்குமரன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து முத்துக்குமரன் உடல் அவரது சகோதரரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து முத்துக்குமரன் உடல் சாலை மார்க்கமாக உடல் தஞ்சை வழியாக லெட்சுமாங்குடியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள் அஞ்சலிக்குப் பிறகு உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.