அம்பேத்கரும் – மோடியும் புத்தகத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் வெளியிட்டுள்ளார்.
ப்ளூ கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன் என்கிற நிறுவனம் அம்பேத்கரும்-மோடியும், சீர்திருத்தவாதிகளின் சிந்தனையும், செயல் வீரர்களின் நடவடிக்கையும் என்கிற ஆங்கில புத்தகத்தை இன்று வெளியிட்டது. இந்தப் புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா அணிந்துரை வழங்கியிருந்தார். அந்த அணிந்துரையில், ‘அம்பேத்கரை தெரிந்து கொண்டால் மட்டும் போதாது, அவரது மதிப்பை உணர்ந்து அவரது சிந்தனைகளை நடைமுறைப்படுத்தி வருபவர்களை ஊக்குவிக்க வேண்டும். பிரதமர் மோடி அதைச் செய்து வருகிறார் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து பல்வேறு தரப்பினரும் இளையராஜாவை கடுமையாக விமர்சித்து வந்தனர். இதன்பின்னர் இளையராஜா மாநிலங்களவை நியமன உறுப்பினராக பதவியேற்றார். அப்போதும் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில் அம்பேத்கரும், மோடியும் என்ற நூல் வெளியீட்டு விழா டெல்லியில் நேரு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. மத்திய தகவல் ஒளிபரப்பு துறை சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டார்.
மேலும் விழாவில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், எல்.முருகன், நடிகை குஷ்பு மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் பங்கேற்றனர். ஆனால் இந்த விழாவில் இசைமையப்பாளர் இளையராஜா பங்கேற்கவில்லை. இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறுகையில், “இன்றைய தினம் அம்பேத்கரும், மோடியும் என்ற புத்தகத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ளார்.
அம்பேத்கர் கனவு கண்டதுபோல், இன்றைய தினம் மகளிர் சக்தியை நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பவர் நமது பிரதமர். சுய சார்பு பாரதத்தை டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தி இருந்தார். இன்று நாம் சுயசார்பு பாரதத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். நமது பிரதமர் நிறைவேற்றி கொண்டிருக்கிறார். மக்களுக்கு குடிநீர் எவ்வளவு அவசியம் என்பதை அம்பேத்கர் தெரிவித்து இருந்தார். அதை நிறைவேற்றும் வகையில் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் வாயிலாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
டாக்டர் அம்பேத்கரின் கனவு ஒவ்வொருவருக்கும் தரமான கல்வியை வழங்குவது, அதை புதிய கல்விக் கொள்கையின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். டாக்டர் அம்பேத்கரின் கனவை பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை ஒட்டி சென்னையில் நாளை மாரத்தான் போட்டி நடைபெற இருக்கிறது. கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியும் நடைபெற இருக்கிறது” இவ்வாறு எல்.முருகன் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM