வருவாய்கள் மற்றும் செலவீனங்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் நிதி முகாமைத்துவம் குறித்த சரியான தகவல்களைப் பெற்றுக் கொண்டு நிதிச் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்காகத் தனியான வரவுசெலவுத்திட்ட அலுவலகமொன்றை பாராளுமன்றத்தில் அமைப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக நேற்று (15) தெரிவித்தார்.
செப்டெம்பர் 15ஆம் திகதி கொண்டாடப்படும் ஜனநாயகத் தொடர்பான சர்வதேச தினத்தையொட்டி பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்துடன் இணைந்து தேசிய ஜனநாயக நிறுவனத்தின் (National Democratic Institute /NDI) அனுசரணையில் நடைபெற்ற விசேட பொதுச் சேவைகள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“ஜனநாயகமும் இளைஞர் சமூகத்தின் வகிபாகமும்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி இளைஞர் யுவதிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
உலகில் அபிவிருத்தியடைந்த ஜனநாயக நாடுகளைப் போல வழிவகைகள் பற்றிய குழு, வங்கித்தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழு, பொருளாதார உறுதிப்படுத்தல் குழு உள்ளிட்ட புதிய குழுக்கள் அமைக்கப்பட்டு, பாராளுமன்றத்தை மேலும் பலுப்படுத்த எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து செயலாளர் நாயகம் இங்கு விளக்கமளித்தார்.
பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர, படைக்கலசேவிதர் நரேந்திர பெர்னாந்து, பாராளுமன்ற நிர்வாகப் பணிப்பாளர் ஜீ.தட்சனாராணி, ஹட்சாட் பதிப்பாசிரியர் நயனி லொக்குகொடிகார, சட்டவாக்கப் பணிப்பாளரும், தொடர்பாடல் திணைக்களப் பிரதிப் பணிப்பாளருமான ஜனகாந்த சில்வா, தகவல் முறைமை மற்றும் முகாமைத்துவத் திணைக்களத்தின் பணிப்பாளர் மகேஷ் பெரேரா, பிரதம ஆய்வு அதிகாரி அயேஷா கொடகம ஆகியோர் இதில் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர்.
ஜனநாயகம் மற்றும் இளைஞர் சமூகத்தின் வகிபாகம், சட்டவாக்க செயற்பாடுகள் உள்ளிட்ட பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள், நிலையியற் கட்டளைகள், பாராளுமன்ற உறுப்பினர்களின் பணிகள் உள்ளிட் பல்வேறு விடயங்கள் குறித்து இளைஞர் யுவதிகளுக்கு சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் கருத்துப் பகிர்வுகள் இடம்பெற்றன. இதில் கலந்துகொண்ட இளைஞர் யுவதிகளுக்குப் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கான வாய்ப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பணிப்பாளர் சட்டவாக்க சேவைகள் / பணிப்பாளர் தொடர்பாடல் (பதில்)
இலங்கை பாராளுமன்றம்