அலகாபாத்: கட்டண உயர்வை கண்டித்து அலகாபாத் பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தினர். மாணவர்களின் போராட்டத்திற்கு பிரியங்கா காந்தி, அகிலேஷ் ஆதரவு அளித்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்கள் சேர்க்கை, தேர்வு போன்றவற்றிக்கான கட்டணத்தை சமீபத்தில் உயர்த்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று நடந்த போராட்டத்தின் போது கல்லூரி வளாகத்தில் தீப்பந்தம் ஏந்தியும், கட்டண உயர்வுக்கு எதிராகவும், மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
அப்ேபாது இரண்டு மாணவர்களின் நிலைமை திடீரென மோசமடைந்ததால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.சந்திரசேகர் ஆசாத் சிலை முன் திரண்ட மாணவர்கள், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர். முன்னதாக கட்டண உயர்வு போராட்டத்திற்கு பிரியங்கா காந்தி ஆதரவு தெரிவித்தார். அவர் வெளியிட்ட பதிவில், ‘அலகாபாத் பல்கலைக்கழகத்தில் 400 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது, பாஜக அரசின் மற்றொரு இளைஞர் விரோத நடவடிக்கையாகும்.
இளைஞர்களின் கல்வியிலும் பெரும் ஆதாயத்தை அடைய பல்கலைக்கழகம் முயற்சித்துள்ளது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, புதிய கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்’ என்றார். அதேபோல், சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.