சர்ச்சையான அணிந்துரை: மோடி நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்காத இளையராஜா!

டெல்லியில் ‛அம்பேத்கரும் மோடியும்’ என்ற புத்தகத்தை குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வெளியிட்டார். இந்த புத்தகத்திற்கு அணிந்துரை எழுதிய இளையராஜா, விழாவில் பங்கேற்கவில்லை.

தலைநகர் டெல்லியில் ‘புளூ கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன்’ என்ற நிறுவனம் சார்பில், ‘அம்பேத்கரும் மோடியும் சீர்திருத்தவாதிகளின் சிந்தனையும் செயல் வீரர்களின் நடவடிக்கையும்’ என்ற ஆங்கில புத்தகம் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இந்த புத்தகத்திற்கு பிரபல இசை அமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா அணிந்துரை எழுதி இருந்தார். புத்தகத்தில், அம்பேத்கரின் லட்சியங்களுக்கும் புதிய இந்தியாவின் வளா்ச்சிப் பயணத்துக்கும் இடையிலான மறுக்க முடியாத பிணைப்பு, இந்தியா குறித்த அவரின் தொலைநோக்குப் பாா்வை விவரிக்கப்பட்டு உள்ளது.

மேலும், அம்பேத்கரின் தொலைநோக்குப் பாா்வை திறம்பட அமலுக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளதை எடுத்துக்காட்ட பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் நூலில் எடுத்துரைக்கப்பட்டு உள்ளன.

இந்த புத்தகத்தை டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில் குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார். மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் புத்தகத்தை குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பெற்றுக் கொண்டார்.

இவ்விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன், குஷ்பு மற்றும் பாஜக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்ட நிலையில் இந்த நூலுக்கு அணிந்துரை எழுதிய இளையராஜா பங்கேற்கவில்லை. இது தற்போது பேசு பொருளாக மாறி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.