பாட்னா: பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த ஆகஸ்டில் இந்த கூட்டணி முறிந்தது. ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸுடன் கைகோத்த ஐக்கிய ஜனதா தளம் புதிய கூட்டணி அரசை அமைத்தது. அந்த கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராகவும் ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.
கூட்டணி மாறிய பிறகு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் முதல்வர் நிதிஷ் குமார் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அண்மையில் டெல்லி சென்ற அவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துப் பேசினார்.
இந்த சூழலில் பிஹார் தலைநகர் பாட்னாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் நிதிஷ் குமார் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது, “வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைத்தால் பின்தங்கிய மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று நிதிஷ் குமார் நீண்டகாலமாக கோரி வருகிறார். ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களும் சிறப்பு அந்தஸ்து கோரி வருகின்றன. எனவே முதல்வர் நிதிஷ் குமாரின் வாக்குறுதி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
வரும் மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ் முன்னிறுத்தப்படக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை அவர் மறுத்து வருகிறார். எனினும் அவரது நடவடிக்கைகள், கருத்துகள் தேசிய அரசியலில் அவர் ஆழமாகக் கால் பதிக்கிறார் என்பதை உணர்த்துகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை, நிதிஷ் குமார் ரகசியமாக சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பை இருவரும் உறுதி செய்துள்ளனர்.
ஐக்கிய ஜனதா தளத்தில் பிரசாந்த் கிஷோர் மீண்டும் இணைவார், வரும் மக்களவைத் தேர்தலுக்கு வியூகங்களை வகுத்துக் கொடுப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து பிரசாந்த் கிஷோர் நேற்று கூறும்போது, “முதல்வர் நிதிஷ் குமார் வாக்குறுதி அளித்தபடி பிஹாரில் ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கினால் அவரோடு அல்லது அவரது கூட்டணியோடு இணைவது குறித்து சிந்திப்பேன்” என்று கூறியுள்ளார். தேசிய அரசியலில் நிதிஷ் ஆர்வம் காட்டுவதால் அவரது ஒவ்வொரு நடவடிக்கையும், கருத்தும் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.