"கேப்டன் கூல்!"- ஆனந்த் மஹிந்திரா பாராட்டிய மனிதர்; காட்டு யானை vs பொலேரோ டிரைவர் – நடந்தது என்ன?

காட்டுப் பகுதிகளில் கார் ஓட்டும்போது கவனமாக ஓட்டுபவர் மட்டும் நல்ல டிரைவர் இல்லை. விலங்குகளைத் தொந்தரவு செய்யாமல், ஒருவேளை அவை கோபப்பட்டால் பதற்றப்படாமல் விபத்துக்குள்ளாக்காமல் அவற்றிடமிருந்து லாகவமாகத் தப்பித்து திறமையாக வாகனம் ஓட்டுபவர்தான் மிக நல்ல டிரைவர். 

அப்படி ஒரு டிரைவருக்குத்தான் ‘பெஸ்ட் பொலேரோ டிரைவர்’ எனும் பட்டத்தையும், ‘கேப்டன் கூல்’ எனும் அடைமொழியையும் வழங்கியிருக்கிறார், மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா.

கர்நாடகாவில் உள்ள கபினி எனும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், ஒரு பொலேரோ வாகனம் ஒன்றைக் காட்டு யானை ஒன்று துரத்த, ரிவர்ஸிலேயே போய், அந்த யானையிடம் இருந்து தப்பித்து பயணிகளையும் பாதுகாத்த அந்த டிரைவர் காரோட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைத்தான் ஆனந்த் மஹிந்திரா, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து Best Bolero Driver மற்றும் Captain Cool பட்டங்களை அந்த டிரைவருக்கு வழங்கியிருக்கிறார்.

வீடியோவில் அந்த யானையைப் பார்த்தாலே மிரட்டலாக இருக்கிறது. மதமதவென வளர்ந்து, நீளமான தந்தங்களுடன், சுமார் 2,500 கிலோ எடையுடன் கம்பீரமாக இருக்கும் அந்த யானையைச் சும்மா பார்த்தாலே ஒரு நிமிடம் மனது உறையும். அந்த யானை கோபமாக, பிளிறலுடன் ஓடி வருவதைப் பார்க்கும்போது அள்ளுவிடுகிறது. 

கபினி ரிசர்வ்டு வனப்பகுதியில் பொதுமக்களுக்கான காட்டுச் சவாரியின் போதுதான் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. அந்த ஓப்பன் டைப் பொலேரோ வாகனத்தை ஓட்டும் டிரைவர், அந்தக் காட்டுக்குப் பழக்கப்பட்ட டிரைவராக இருக்க வேண்டும். நட்டநடுக் காட்டுப் பாதையில் கடுமையான பிளிறலுடன் கோபமாக யானை துரத்துகிறது. பயணிகள் பதற்றத்தில் உறைய ஆரம்பிக்க, அந்த டிரைவர் பதற்றமே படாமல் கூலாக பின் பக்கம் திரும்பிப் பார்க்காமலேயே சைடு மிரர்களின் உதவி கொண்டே யானையின் வேகத்துக்கு ரிவர்ஸிலேயே போய் பயணிகளின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறார்.

Bolero Driver

இதை அந்த பொலேரோவில் பயணித்த பயணி ஒருவர், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட, அதுதான் வைரலாகப் பரவியிருக்கிறது. ‘‘டிரைவர் பதற்றமே ஏற்படாமல் மிக சாதுர்யமாக ரிவர்ஸ் கியரிலேயே பயணித்து ஒரு பள்ளத்தில் இறக்கி, யானையைத் திசை திருப்பி எங்கள் உயிரைக் காப்பாற்றி இருக்கிறார்!’’ என்கிறார் அந்தப் பயணி.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.