அடுக்குமாடி குடியிருப்பின் சமையலறையில் இன்டர்நெட்டில் பார்த்து கஞ்சா செடி வளர்ப்பு: க.காதலியுடன் இன்ஜினியர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்பின் சமையல் அறையில் கஞ்சா செடி வளர்த்து வந்த சாப்ட்வேர் இன்ஜினியர், அவரது கள்ளக்காதலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கேரளாவில் கஞ்சா, பிரவுன்சுகர், எம்டிஎம்ஏ உள்பட போதைப்பொருள் விற்பனையும், பயன்பாடும் கடுமையாக அதிகரித்து வருகிறது. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு பெருமளவு போதைப்பொருள் கடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொச்சியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது ஒரு குடியிருப்பில் கஞ்சா செடி வளர்க்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அந்த குடியிருப்பின் சமையலறையில் ஒரு மண் சட்டியில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டது தெரியவந்தது. 4 மாதமான அந்த செடி ஒன்றரை மீட்டர் உயரம் இருந்தது. செடிக்கு காற்று கிடைப்பதற்காக அதன் அருகில் சிறிய மின்விசிறியும், வெளிச்சத்திற்காக எல்இடி பல்பும் பொருத்தப்பட்டிருந்தது.

கஞ்சா செடியை கைப்பற்றிய போலீசார், அந்த குடியிருப்பில் வசித்து வந்த பத்தனம்திட்டா மாவட்டம் கோன்னி பகுதியை சேர்ந்த ஆலன் (26) மற்றும் அவரது கள்ளக்காதலியான காயங்குளத்தை சேர்ந்த அபர்ணா (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர். கஞ்சா செடியை வளர்ப்பது எப்படி? என்பதை இன்டர்நெட்டில் பார்த்து 2 பேரும் தெரிந்து கொண்டு உள்ளனர். ஆலன் கொச்சியில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். விசாரணைக்குப் பிறகு 2 பேரையும் போலீசார் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.