இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான எல்லைப்பிரச்னையென்பது, கடந்த சில மாதங்களாகவே பெரிய அளவில் பேசுபொருளாகிவருகிறது. அதுவும், இந்திய-சீன எல்லையில், சீனா தனி கிராமம் ஒன்றை உருவாக்கியிருப்பது செயற்கைக்கோள் படங்கள் வாயிலாகத் தெரியவர அது இன்னும் பிரச்சினையைக் கிளப்பியது.
அதைத் தொடர்ந்து அரசியல் எதிர்க்கட்சிகள் பலவும் ஆளும் பா.ஜ.க-வைச் சாடிவந்தன. அதோடு காங்கிரஸும், `இந்திய நிலத்தை மோடி சீனாவுக்குத் தாரைவார்த்துவிட்டார்’ என விமர்சனம் செய்துவந்தது. இந்த நிலையில், பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி சுப்பிரமணியன் சுவாமியும், தற்போது இந்த விவகாரத்தில் மோடியை ட்விட்டரில் சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “மோடி முக்கியமாக மிக எளிய வார்த்தைகளில் சொல்லவேண்டும். ஒன்று மக்கள் விடுதலை ராணுவத்தை, இந்திய ராணுவ எல்லையிலிருந்து வெளியேற்றுங்கள் அல்லது நேரத்தை நாங்கள் எடுத்துக்கொள்வோம். ஆனால் அதேசமயம், அவர்களை நாங்கள் வெளியே தூக்கியெறிவோம். மேலும், உங்களுடைய 56 இன்ச் மார்பை நிரூபித்துக் காட்டுங்கள் அல்லது அதானியின் அறிவுரைப்படி சீனா மற்றும் கத்தாரிடம் சரணடையுங்கள்” எனப் பதிவிட்டிருக்கிறார்.