குஜராத்தில் திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பின், தனது கணவன் ஒரு பெண் என்பதை மனைவி கண்டுபிடித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் வசிக்கும் 40 வயதான பெண் ஒருவர், கோத்ரி காவல்நிலையத்தில் தனது கணவன் மீது கொடுத்துள்ள புகார் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. 2014 ஆம் ஆண்டு தன்னை திருமணம் செய்தவர் ஒரு பெண் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டு மோசடி புகார் தொடர்ந்துள்ளார் அந்த பெண்.
அந்த புகாரில், “எனது முதல் கணவர் 2011 ஆம் ஆண்டு சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். 14 வயதில் மகளை வைத்துக்கொண்டு தனியாளாக வாழத் துவங்கினேன். இருப்பினும் மேட்ரிமோனியல் தளம் ஒன்றில் 2வது திருமணம் செய்வதற்காக பதிவு செய்திருந்தேன். அதன்மூலமாகத்தான் 2013 ஆம் ஆண்டு விஜயதா என்ற விராஜ் வர்தன் அறிமுகமானார். பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் 2014 ஆம் ஆண்டு பிப்ரவரியில் இருவரும் திருமணம் செய்து கொண்டோம்.
பின்னர் விஜயதா தேனிலவுக்கு காஷ்மீருக்கு அழைத்துச் சென்றார். இருப்பினும் எங்கள் இருவருக்குள் தாம்பத்தியம் நடைபெறவில்லை. விஜயதா பல நாட்கள் சாக்குப்போக்குகளைக் கூறிக்கொண்டே இருந்தார். கட்டாயப்படுத்தி தாம்பத்தியம் மேற்கொள்ள நான் முயற்சிக்கும்போது, சில ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவில் இருந்தபோது அவர் சந்தித்த ஒரு விபத்து தன்னை உடலுறவு கொள்ள முடியாதவனாக ஆக்கியதாக தெரிவித்தார்.
ஆனால் ஒரு சிறிய அறுவை சிகிச்சை போதும். இந்த பிரச்சினை சரியாகிவிடும் என்று அவர் தெரிவித்தார். பின்னர் 2020 ஜனவரி மாதத்தில் அறுவை சிகிச்சை செய்வதற்காக அவர் கொல்கத்தா புறப்பட்டார். ஆனால் பின்னாளில் தான் அவர் ஆண் உறுப்புகளை பொருத்துவதற்கான பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்தது எனக்கு தெரியவந்தது. அவர் ஒரு பெண் என்பது தெரியவந்ததும் நான் அதிர்ச்சியடைந்தேன்.
இதையடுத்து அவர் என்னுடன் ‘இயற்கைக்கு மாறான உடலுறவு’ மேற்கொள்ள துவங்கினார். இதைப் பற்றி யாரிடமாவது பேசினால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று என்னை மிரட்டினார். எனவே அவர் மீது மோசடி புகார் பதிவு செய்ய வேண்டும். அவரது குடும்ப உறுப்பினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.” என்று குற்றம்சாட்டியுள்ளார் அந்த பெண்.
இதையடுத்து விஜயதா என்ற விராஜ் வர்தன் மீது மோசடி வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் எம்.கே.குர்ஜார், குற்றம் சாட்டப்பட்ட விஜயதாவிடம் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM