ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் போர்வெல் குழிக்குள் விழுந்த சிறுமியை மீட்புக் குழுவினர் பத்திரமாக உயிருடன் மீட்டனர். ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டம் ஜஸ்சா படா கிராமத்தை சேர்ந்த அங்கிதா (2) என்ற சிறுமி தனது வீடு அருகே இருந்த 200 அடி ஆழத்துக்கு தோண்டப்பட்ட மூடப்பட்ட ஆழ்துளை கிணறு அருகே விளையாடிக் கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக, அந்த சிறுமி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தார். நீண்ட நேரமாக சிறுமி காணாதது குறித்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஆழ்துளை கிணற்றுக்குள் இருந்து வரும் சிறுமியின் அழுக்குரல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.
அப்போது சுமார் 60 முதல் 70 அடி ஆழத்தில் சிறுமி சிக்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது. தகவலறிந்த தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆள்துளை கிணற்றைச் சுற்றிலும் பொக்லைன் எந்திரங்களை பயன்படுத்தி பள்ளம் தோண்டி குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குழாய் வழியாக ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தைக்கு ஆக்சிஜன் அளிக்கப்பட்டதோடு, கேமரா மூலம் குழந்தையின் அசைவுகள் கண்காணிக்கப்பட்டன. சுமார் 7 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சிறுமியை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
பின்னர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும், அங்கு அவர் நலமுடன் இருப்பதாக தவுசா மாவட்ட கலெக்டர் கம்மர் உல்சமான் சவுத்ரி தெரிவித்தார். இதுகுறித்து சிறுமியின் தாத்தா கூறுகையில், ‘இந்த ஆழ்துளை கிணறு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தோண்டப்பட்டது, ஆனால் தண்ணீர் இல்லாததால் வறண்டு விட்டது. அதனால் மூடப்பட்டது. தற்போது போர்வெல்லில் தேங்கியிருந்த மண்ணை அள்ளுவதற்காக மூடியைத் திறந்தோம். நாங்கள் தண்ணீர் குடிப்பதற்காக வீட்டுக்குள் சென்று திரும்புவதற்குள் அங்கு விளையாடிக் கொண்டிருந்த அங்கிதா போர்வெல் குழியில் தவறி விழுந்தார்’ என்றார்.