மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக சென்னை பல்கலைக்கழக பேராசிரியருக்கு எதிராக புகார் அளித்த பேராசிரியை மீது வன்கொடுமை தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் ஆர்.ராதாகிருஷ்ணன் என்பவர், மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாகவும், மாந்திரீகங்கள் செய்வதாகவும் கூறி மற்றொரு பேராசிரியையான ரீட்டாஜான் என்பவர், பல்கலைக்கழக பதிவாளரிடம் புகார் அளித்துள்ளார்.
இதை அடுத்து, பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் தனக்கு எதிராக புகார் அளித்து உள்ளதாகவும், பல்கலைக்கழகம் தனக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத நிலையில் பொய் புகார் அளித்த பேராசிரியை ரீட்டா ஜானுக்கு எதிராக வன்கொடுமை தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக் கோரி ராதாகிருஷ்ணன், சென்னை அமர்வு நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை முறையாக விசாரிக்காமல் தள்ளுபடி செய்து விட்டதாகக் கூறி, பேராசிரியை ரீட்டாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடக் கோரி ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், மாந்திரீகம் செய்வதாகவும் துறை தலைவர் என்ற முறையில் பேராசிரியை ரீட்டா புகார் அளித்தது வன்கொடுமை தடைச் சட்டப்படி குற்றமாகாது என்பதால், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட முடியாது எனக் கூறி, பேராசிரியர் ராதாகிருஷ்ணனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.