பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம், 2 மாதங்களை கடந்தும் முழு கொள்ளளவை தொட்டவாறு உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த, பிஏபி திட்டத்திற்குட்பட்ட ஆழியார், பரம்பிகுளம் அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் விவசாய தேவைக்கும், குடிநீர் தேவைக்கும் அவ்வப்போது திறக்கப்படுகிறது. இந்த ஆண்டில் கடந்த ஏப்ரல் மாதம் வரை ஆழியார் மற்றும் பரம்பிக்குளம் உள்ளிட்ட அணைகளுக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்ததுடன், அதன் நீர்மட்டம் சரிந்தது.
இதில், கடந்த மே மாதத்தில் 120 அடி கொண்ட ஆழியார் அணையின் நீர்மட்டம் 68 அடியாகவும், 72 அடி கொண்ட பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 30 அடியாகவும் மிகவும் குறைந்திருந்தது. இதனால் வரும் காலங்களில் தண்ணீர் இன்றிபோய்விடுமோ? என்னும் கவலை விவசாயிகளிடம் இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டில் கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்திலிருந்து தென்மேற்கு பருவமழை பெய்யத்துவங்கியது. மழைபெய்ய துவங்கிய சில நாட்களில் இருந்து, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலிருந்து அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க ஆரம்பித்தது.
இந்த பருவமழை ஆகஸ்ட் மாதம் 3வது வாரம் வரை நீடித்தது. இதனால், அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த ஜூலை 17ம் தேதி பரம்பிக்குளம் அணை முழு அடியை எட்டியது. தண்ணீர் வரத்தை பொறுத்து அடிக்கடி உபரிநீர் திறக்கப்பட்டது. இருப்பினும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அடிக்கடி பெய்த மழையால், பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 2 மாதமாக முழு கொள்ளளவையும் தொட்டவாறு உள்ளது. இதனால் பாசன பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கிடையில் நேற்றைய நிலவரப்படி, பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. இருப்பினும், வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் தூணக்கடவு அணைக்கு திறக்கப்படுவது தொடர்ந்தது. பிஏபி திட்ட அணைகளுக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்திருப்பதால், இன்னும் சில நாட்களுக்கு அணையின் நீர்மட்டம் முழு அடியையும் எட்டியவாறு இருக்கும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.