நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே, நெற்பயிர்களுக்கு டிரோன் மூலம் மருந்து தெளிக்க விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே வைகையாற்று படுகை விளாம்பட்டி பகுதியில் சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெற்பயிர்களை நோய் மற்றும் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க நவீன முறையில் மருந்து தெளிக்கும் முறையை விவசாயிகளிடையே அறிமுகப்படுத்தி, பயிற்சியளிக்க காந்திகிராம வேளாண் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையம், நிலக்கோட்டை அரசு வேளாண்மை துறை இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி டிரோன் மூலம் நெற்பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் தொழில்நுட்ப செயல்முறையை விவசாயிகளிடையே விளக்கி பயிற்சியளிக்கும் முகாம் நடந்தது. பயிற்சி முகாமிற்கு நிலக்கோட்டை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். நிலக்கோட்டை வேளாண் உதவி இயக்குனர் உமா முன்னிலை வகித்தார். காந்திகிராம வேளாண்மை பூச்சிகள் கட்டுப்பாடு தொழில்நுட்ப வல்லுனர் ஷாஹீன்தாஜ் வரவேற்றார். காந்திகிராம வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்துறை இயக்குனர் தமிழ்மணி விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
முகாமிற்கு காந்திகிராம அறிவியல் மைய தலைவர் செந்தில்குமார், நிலக்கோட்டை வேளாண்மைத்துறை அலுவலர் வேல்முருகன், உதவி வேளாண் அலுவலர் மணிமாறன், திமுக தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர் வெள்ளிமலை, நெடுமாறன், கவுன்சிலர் தியாகு, விளாம்பட்டி விவசாய ஆர்வலர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் உக்கிரபாண்டி, செயலாளர் அழகுமலை, பார்த்திபன் முருகபாண்டி உள்பட விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.