கனடாவின் 47-ஆவது வருடாந்திர சர்வதேச திரைப்பட விழா, செப்டம்பர் 8ம் தேதி அன்று டொரான்டோ நகரில் தொடங்கியது. இந்த மாபெரும் திரைப்பட விழா 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. சர்வதேச அரங்கில் படமாக்கப்பட்ட பல்வேறு வகையான திரைப் படைப்புகள் இந்த விழாவில் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.
இது ஒரு புறம் இருக்க, கனடாவில் தமிழ்ச் சமூகத்தினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழ் மொழிக்கும் தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் விதமாக டொரான்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா 3ம் ஆண்டாக இந்த ஆண்டு நடைபெற்றது.
செப்டம்பர் 9 முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த திரைப்பட விழாவானது, டொராண்டோவின் ரிச்மண்ட் ஹில் பகுதியில் அமைந்துள்ள யார்க் சினிமாஸ் எனும் திரையரங்கில் கனடாவாழ் தமிழ்ச் சமூகத்தினரின் உற்சாக வரவேற்புடன் நடைபெற்றது.
60-க்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்படைப்புகள் திரையிடல்:
இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், அர்ஜென்டினா, போன்ற உலகின் பல்வேறு நாடுகளில் படமாக்கப்பட்ட 460-க்கும் மேற்பட்ட படைப்புகள் இந்த விழாவில் திரையிடப்படுவதற்காக அனுப்பிவைக்கப்பட்டன. அவற்றில் 90-க்கும் மேற்பட்ட படைப்புகள் நடுவர் குழுவால் தேர்வுசெய்யப்பட்டு, செப்டம்பர் 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் 60-க்கும் மேற்பட்டவை திரையிடப்பட்டன.
முழு நீள திரைப்படங்கள் மட்டுமல்லாது குறும்படங்கள், ஆவணப்படங்கள், இணைய தொடர்கள், அனிமேஷன் திரைப்படங்கள், இசை ஆல்பம்கள், விளம்பர படங்கள் ஆகிய பிரிவுகளில் உலகம் முழுவதிலும் இருந்து படைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. உலகின் பல்வேறு பகுதிகளில் படமாக்கப்பட்ட தமிழ் திரைப்படைப்புகளை வரவேற்று அதற்கு உலக அங்கீகாரம் தருவதே இந்த விழாவின் நோக்கம் என்கிறார் டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவை மூன்று ஆண்டுகளாக நடத்திவரும் திரு. செந்தூரன் நடராஜா.
இந்த நிலையில், செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற்ற தொடக்க விழாவில் கலந்துகொண்ட கனடாவின் முன்னாள் எம்.பியும் தமிழருமான இராதிகா சிற்சபையீசன் இவ்விழா குறித்து கூறுகையில், “கனடாவில் வாழும் தமிழர்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி வந்துகொண்டு இருக்கிறார்கள். தமிழ் திரைத்துறையை பொறுத்தவரை இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசை கலைஞர்களை உள்ளிட்ட பலரை கனடா உருவாக்கி வருகிறது. அந்த வகையில் இங்கு வளர்ந்து வரும் திரைப்பட கலைஞர்கள் உட்பட உலக அரங்கிலான கலைஞர்களுக்கும் இது போன்ற நிகழ்வுகள் ஊக்கம் அளிக்கக்கூடியதாக இருக்கும். மேலும், போரின் காரணத்தினால் உலகம் முழுவதும் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கை தமிழ் மக்களுடன் தமிழ் மொழி என்கிற அடையாளம் எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்கு ஊக்குவிப்பதாக இந்த நிகழ்ச்சியை நான் பார்க்கிறேன்” என்று கூறினார்.
சிறந்த படமாக தேர்வாகியுள்ள பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ திரைப்படம்:
விழாவில் திரையிடப்பட்ட இந்தியாவில் படமாக்கப்பட்ட திரைப்படங்களில் சில:
சுரேந்தர் ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ‘முத்தையா வீடு’, கிஷோர் இயக்கத்தில் ‘மாயோன்’, சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ‘மாமனிதன்’, பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த ‘இரவின் நிழல்’, மலேசியாவில் படமாக்கப்பட்ட ‘அடை மழைக் காலம்’, அமெரிக்காவில் படமாக்கப்பட்ட சத்யராஜ்குமாரின் ‘காதல்’ திரைப்படம் மற்றும் ஹேமந்த் ஸ்ரீனிவாசனின் ‘காதலே காதலா’.
இந்த ஆண்டு டொராண்டோவில் நடைபெற்ற சர்வதேச தமிழ் திரைப்படங்களுக்கான விழாவில் சிறந்த நடிகர் மற்றும் நடிகை, சிறந்த திரைப்படம், சிறந்த ஆவணப்படம் உட்பட 20-க்கும் மேற்பட்ட விருதுகளுக்காக திரைப்படைப்புகள் தேர்வாகியுள்ளன. சிறந்த திரைப்படத்திற்கான ஜூரி விருதை இயக்குநர் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ திரைப்படம் பெற்றுள்ளது. மேலும் இந்த திரைப்படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது, சிறந்த இயக்குநருக்கான ஜூரி விருது இயக்குனர் பார்த்திபனுக்கும், சிறந்த அறிமுக நடிகைக்கான விருது சினேகா குமாருக்கும் என ‘இரவின் நிழல்’ திரைப்படம் மொத்தம் 4 விருதுகளைப் பெற்றுள்ளது.
அதோடு, சிறந்த நடிகருக்கான ஜூரி விருதை ‘மாமனிதன்’ திரைப்படத்திற்காக விஜய் சேதுபதியும்,
ரசிகர்களைக் கவர்ந்த சிறந்த திரைப்படத்திற்கான விருது சிறந்த சீனு ராமசாமி இயக்கத்தில் ‘மாமனிதன்’ திரைப்படத்திற்கும், சமூகப் பிரச்சனையை படம்பிடித்துள்ள சிறந்த குறும்படம் சுரேந்தர் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘முத்தையா வீடு’ திரைப்படத்திற்கும் கிடைத்துள்ளது.
இந்நிலையில் ஒரே திரையரங்கில் இத்தனை தமிழ் திரைப்படங்களைக் காண்பது உற்சாகமளிப்பதாக டொராண்டோவில் உள்ள திரையரங்கிற்கு வந்திருந்த தமிழ் மாணவர்கள் கூறினர். “கனடா போன்ற வெளிநாட்டில் வாழும் எங்களுக்கு ஒரே இடத்தில் இத்தனை தமிழ் திரைப்படைப்புகளைக் காண்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக, திரைத்துறை சார்ந்த மாணவனாகிய எனக்கும் என் உடன் வந்திருக்கும் நண்பர்களுக்கும் இங்கு திரையிடப்படும் படங்கள் நிறைய படிப்பினையும் ஊக்குவிப்பும் அளிக்கிறது” என்றார் கனடாவில் படிக்கும் தமிழ் மாணவர் ரோஹித் விஷால்.
வெற்றிபெற்ற குறும்படங்களுக்கு 6 லட்சம் ரூபாய் வரை ரொக்கப் பரிசு:
நடுவர் குழுவால் தேர்வு செய்யப்படும் 5 குறும்படங்களுக்கு தலா 60,000 ரூபாய் முதல் 6 லட்சம் ரூபாய் வரை ரொக்க பரிசு, கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. முன்னதாக, சென்ற ஆண்டு நடைபெற்ற இதே விழாவில் ‘ஷார்ட் கேட்’ என்ற தமிழ் திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும், திரைப்படத்தின் கதாநாயகன் ஸ்ரீதருக்கு சிறந்த நடிகர் விருதும் வழங்கப்பட்டது. மேலும் அமுதவாணன் இயக்கத்தில் வெளியான ‘கோட்டா’ திரைப்படம் மற்றும் ரங்கா இயக்கத்தில் வெளிவந்த ‘பெஸ்டி’ உட்பட பல தமிழ் திரைப்படங்கள் சென்ற ஆண்டு விருதுகளை குவித்தது குறிப்பிடத்தக்கது.
கனடா போன்ற பல மொழி பேசும் மக்கள் வாழ்கின்ற நாட்டில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளித்து தமிழ் திரைப்பட கலைஞர்களை ஊக்குவிக்கவும், தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு விருந்து படைக்கவும் இது போன்ற விழாக்கள் உதவி வருகின்றன என்றே சொல்லலாம்.
– ஐஸ்வர்யா ரவிசங்கர்