உக்ரைன் போரால் இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள்; 29 நாடுகளின் பட்டியலை வெளியிட்டது ஒன்றிய அரசு: இந்தியாவில் படிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதால் தவிப்பு

புதுடெல்லி: உக்ரைன் போரால் நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் 29 நாடுகளின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கலாம் என்று, அந்த நாடுகளின் பெயர் பட்டியலை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. உக்ரைனின் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் படிப்பு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ‘ரஷ்ய போரால் மருத்துவப் படிப்பை பாதியில் விட்டு உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்களுக்கு, இந்தியாவில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை அளிக்க சட்டத்தில் இடமில்லை.

மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள, வெளிநாட்டில்  பயின்ற இந்திய மாணவர்களுக்கு உதவிடும் வகையில் அவர்கள் வெளிநாடுகளில் தங்கள் படிப்பை தொடர தடையேதும் இல்லை’ என்று தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த பதிலால், ஆயிரக்கணக்கான எம்பிபிஎஸ் மாணவர்களின் கல்விக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்காக ‘அகாடமிக் மொபிலிட்டி’ திட்டத்தின் கீழ், இந்தியா தவிர 29 நாடுகளில் மருத்துவ படிப்பை தொடர அனுமதிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இந்தியாவில் தங்களது படிப்பை தொடர முடியாது. மாணவர்கள் வெளிநாடுகளில் படிப்பதற்காக 29 நாடுகளில் போலந்து, ஆஸ்திரியா, செக் குடியரசு, பிரான்ஸ், ஜார்ஜியா, கஜகஸ்தான், லிதுவேனியா, மால்டோவா, ஸ்லோவாக்கியா, ஸ்பெயின், உஸ்பெகிஸ்தான், அமெரிக்கா, இத்தாலி, பெல்ஜியம், எகிப்து, பெலாரஸ், ​​லாட்வியா, கிர்கிஸ்தான், கிரீஸ், ருமேனியா, சுவீடன், இஸ்ரேல், ஈரான், அஜர்பைஜான், பல்கேரியா, ஜெர்மனி, துருக்கி, குரோஷியா, ஹங்கேரி ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நாடுகளில் படிப்பை முடித்தாலும், அவர்களுக்கு அந்தந்த உக்ரைன் பல்கலைக்கழகத்தால் பட்டப்படிப்பு சான்று வழங்கப்படும்’ என்று தெரிவித்தன.

ஒன்றிய அரசு 29 நாடுகளின் விபரங்களை வெளியிட்டாலும் கூட, எந்தெந்த கல்வி நிறுவனங்களில் படிக்க முடியும் என்ற விபரங்களை தெரிவிக்கவில்லை. மேலும் இந்த நாடுகளில் மருத்துவ படிப்புக்கு என்னென்ன வசதிகள் உள்ளன என்பதையும் அறிவிப்பில் விளக்கவில்லை. தற்போதைய நிலையில் ​​உக்ரைனில் உள்ள சுமார் 20 நிறுவனங்கள் மட்டுமே ஜார்ஜியா போன்ற சில வெளிநாடுகளுடன் புரிந்துணர்வுகளை செய்துள்ளன. போரில் மூன்று பல்கலைக்கழகங்கள் அழிந்துள்ளன. 600க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட இந்தியாவில், வெளிநாட்டில் படிப்பை தொடர முடியாமல் இந்திய மருத்துவ மாணவர்கள் தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.