தந்தை பெரியார் பிறந்த நாளன்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை முன் மனு தர்ம தேவ இதிகாசங்களை எரித்துப் போராட்டம் நடத்த தடை விதிக்கக்கோரிய வழக்கில், அவரவர் விரும்பிய மத வழிபாடு செய்து கொள்ள அவரவர்களுக்கு உரிமை உண்டு என்றும் அதனை யாரும் தடுக்க முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சார்ந்த ரங்கராஜ் நரசிம்மன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “திருச்சி ஸ்ரீரங்கத்தில் தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு தந்தை பெரியார் சிலை முன்பாக மனு தர்ம தேவ இதிகாசங்களை எரித்துப் போராட்டம் நடத்த உள்ளதாக மக்கள் அதிகாரம் கட்சியினர் போராட்டம் அறிவித்துள்ளனர். இது சட்டவிரோதமானது இதற்கு தடை விதிக்க வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், “போராட்டம் குறித்து காவல்துறையினர் மக்கள் அதிகாரம், திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களை அழைத்து, அமைதி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அதில் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு ஒரு மதத்தினரையோ அவர்களில் வழிபாட்டு முறைகளையோ மத நம்பிக்கையோ அவமதிக்கும் விதமாக போராட்டங்கள் நடத்த அனுமதிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்த நீதிபதிகள் அவரவர் விரும்பிய மத வழிபாடு செய்து கொள்ள அவரவர்களுக்கு உரிமை உண்டு அதனை யாரும் தடுக்க முடியாது என கருத்து தெரிவித்து, மனுதாரரின் கோரிக்கை குறித்து காவல்துறையினர் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். மேலும் போராட்டங்கள் நடத்த அனுமதிக்கவில்லை என தெரிவித்து, ஸ்ரீரங்கம் கோவில் வழிபாட்டிற்கும், பக்தர்களுக்கும் தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM