சென்னை: நடிகர் அருண்விஜய், பலக் லால்வானி, காளி வெங்கட் போன்ற பலர் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் சினம்.
தனது எதார்த்த நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் நடிகர் அருண் விஜய், சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் அருண்விஜய், இயக்குநர் குமரவேலன், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா ஆகியோர் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.
கண் கலங்கினர்
கேள்வி: சினம் படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்கள் குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: யானை படத்தில் நான் நடித்தது குறித்து அனைவரும் பாராட்டினார். குடும்பத்துடன் படம் பார்த்து பாராட்டியது மிகவும் மகிழ்ச்சியளித்தது. அவர்களது எதிர்பார்ப்பை வருகின்ற படங்களில் பூர்த்தி செய்வது எனது கடமையாகும். ரசிகர்களின் எதிர்பார்ப்பை கண்டிப்பாக சினம் படம் பூர்த்தி செய்யும். 2.20 மணி நேரம் படம் விறுவிறுப்பாக செல்லும் என்றார். படத்தில் குட்டி பெண்ணாக நடித்து குழந்தையின் கதாபாத்திரம் படம் பார்ப்பவர்களை கண் கலங்க செய்யும். ஏனென்றால் புரோடக்ஷன் டீம் படம் பார்க்கும்பொழுது கண் கலங்கியதை என்னால் காண முடிந்தது. அந்த குழந்தை அருமையாக நடித்துள்ளது. இப்படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் அளித்துள்ளோம். நடிகை பலாக் எதார்த்தமாகவும், ஜாலியாகவும் நடித்துள்ளார். மேலும் மறுமலர்ச்சி இயக்குநர் பாரதியும் முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார் என்றார்.
நானும் குழந்தை
கேள்வி: உங்கள் மகன் அர்னவ் குறித்து…
பதில்: குடும்பத்திற்கென நேரம் ஒதுக்க வேண்டியுள்ளது. ஜனவரி முதல் எந்தவொரு படத்தில் நான் கமிட்டாகாத காரணத்தினால் குடும்பத்திற்காக நேரம் ஒதுக்கி ஐரோப்பா சென்றேன். வாட்டர் பார்க்கில் எனது பையன் அர்னவ் உடன் நான் விளையாடும்போது நானும் குழந்தை மாதிரி மாறிவிட்டேன் என்றார்.
உண்மை கதை
கேள்வி: இயக்குநர் குமரவேலன், நீங்கள் சினம் திரைப்படம் குறித்து நீங்கள் விரும்புவது?
பதில்: இந்த படத்தின் கதையானது மிடில் கிளாஸ் குடும்பத்தின் எதார்த்தமான கதை. அதாவது பாரி வெங்கட் என்ற மனிதனுக்கு வாழ்க்கையில் ஏற்படுகின்ற சம்பவம் மற்றும் அதனால் அவனுக்கு ஏற்படும் பாதிப்பு, அந்த பாதிப்பு சமூகத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை பற்றிய கதையாகும் . ஒரு சப்இன்ஸ்பெக்டரின் வாழ்க்கை உண்மையில் ரொம்ப கஷ்டம். இந்த படத்தின் கதை, சரவணன் என்கிற போலீஸ் ரைட்டரின் உண்மையான கதையாகும். ஹரிதாஸ் படத்திற்கு நான் பணிபுரியும்போது, போலீசாருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இப்படத்தில் நடித்துள்ள நடிகர் அருண்விஜய், நடிகை பலக், குழந்தை போன்றோர் படத்தில் நடிப்பது மாதிரியில்லாமல் எதார்த்தமாக நடித்துள்ளனர். இப்படத்திற்கு சரவணன் மற்றும் அவரது உதவி இயக்குநர் கார்த்திக் ஆகியோர் அருமையாக வசனம் எழுதியுள்ளனர். கண்டிப்பாக இந்த படம் அனைவரையும் ஏதாவது ஒரு வகையில் கனெக்ட் செய்யும் என்றார்.
மற்றொரு இயக்குநர்
கேள்வி: நடிகர் அருண்விஜய் குறித்து சில்வா நீங்கள் கூற விரும்புவது?
பதில்: டெக்னிஷியனுக்கு மரியாதை அளிப்பார். ஸ்ட்ண்ட் செய்யும்பொழுது பிரார்த்தனை செய்வார். முன்னெச்சரிக்கையாக அனைத்து விஷயங்களையும்கூறி விடுவார். இது தான் அவருடைய 25 வருட அனுபவம். தொடர்ந்து ஒர்க் அவுட் செய்வதால் மட்டுமே, அவரது உடம்பை கட்டுக்கோப்பாக இருக்கிறது. ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கும்பொழுது ரொம்ப சின்சியராகவும், ஜாலியாகவும் செய்யக்கூடிய மனிதர். டான்சும் நன்றாக ஆடுவார் என்றார். மேலும் அவர் கூறுகையில், தற்போது சித்திரை செவ்வானம் படத்தை இயக்கியுள்ளேன். இப்படத்தில் பணிபுரிந்த கேமராமேன் கோபிநாத் உடன் 5 முதல் 6 படங்கள் இணைந்து பணியாற்றியுள்ளேன். ரொம்ப எனர்ஜியான மனிதர். இன்னும் சொல்லப்போனால் இந்த படத்தின் மற்றொரு இயக்குநர் என்றார்.
நடிகர் துல்கர் பாராட்டு
கேள்வி: இயக்குநர் குமரவேலன், நடிகர் துல்கர் உங்களிடம் என்ன பேசினார்?
பதில்: நான் இயக்கி விக்ரம்பிரபு நடித்த வாகா படத்தை பார்த்து விட்டு தான் நடிகர் துல்கர் சீதாராம் படத்தில் நடித்தாராம். என்னிடமும், விக்ரம் பிரபுவிடம் பேசினார். மற்ற மாநிலத்தவர் நமது படங்களை பார்த்து பாராட்டும்பொழுது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. துல்கரிடம் சினம் படத்தை பார்க்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளேன் என்றார்.
கண்டிப்பாக திருந்துவார்கள்
கேள்வி: சமீபத்தில் வெளியான விருமன் படம் யூடியூப்பில் பதிவேற்றம் செய்வது குறித்து நீங்கள் கூற விரும்புவது:
பதில்: யூடியூப்பில் புதுப்படம் வெளிவருவது வருந்தத்தக்கது. படம் தயாரிப்பில் உள்ள கஷ்டங்கள், இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடும்பொழுது எத்தனை பேர் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தமிழ் ராக்கர்ஸ் படத்தில் காட்டியுள்ளோம். ரசிகர்கள் சிலர் இனிமேல் பைரஸியில் படங்கள் பார்க்க மாட்டோம் என்று உறுதிமொழி அளித்தது சந்தோஷமாக இருந்தது. சில விஷயங்களை புரிய வைக்க சில நாட்கள் ஆகலாம். ஒரே நாளில் மாற்றம் நடைபெறாது. சொல்ல வேண்டிய கருத்தை நாம் திரும்ப, திரும்ப சொல்லுவோம். கண்டிப்பாக அவர்கள் திருந்துவார்கள் என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://www.youtube.com/watch?v=ywTMYHElzns இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.