சமர்கண்ட்: “இது போருக்கான யுகம் அல்ல; அமைதிக்கான யுகம். புரிந்துகொள்ளுங்கள்” என்று ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதினிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
உக்ரைன் – ரஷ்யா போர் 9 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி புதினிடம் இவ்வாறு கூறியிருப்பது சர்வதேச முக்கியத்தவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 22-வது உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று உஸ்பெகிஸ்தான் சென்றார். உலக அளவில் பண வீக்கம், பொருளதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு ஆகியவை நிலவி வரும் சூழலில், முக்கியமான நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இந்த ஷாங்காய் உச்சிமாநாட்டை உலக நாடுகளே உற்று கவனித்து வருகின்றன.
நரேந்திர மோடி பேச்சு
இந்நிலையில், இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.அப்போது, கொரோனா தொற்றாலும், ரஷ்ய-உக்ரைன் போராலும் உலக விநியோக சங்கிலி
பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவை சர்வதேச உற்பத்தி மையமாக மாற்ற
விரும்புகிறோம் என அவர் கூறினார்.
மேலும், இந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் 7.5% வளர்ச்சி அடையும் என
கூறிய பிரதமர் மோடி, உலகில் வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரியபொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.
போருக்கான யுகம் அல்ல
இதனைத் தொடர்ந்து, மாநாட்டுக்கு இடையே ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதினைபிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி விளாடிமிர் புதினிடம், “இன்றைய யுகம்போருக்கானது அல்ல. மாறாக அமைதிக்கானது” எனக் கூறினார். மேலும், ரஷ்யாவும்,இந்தியாவும் பல ஆண்டுகளாக சிறப்பான நல்லுறவை பகிர்ந்து வருவதாக கூறிய மோடி,எதிர்காலத்திலும் இது நீடிக்கும் எனத் தெரிவித்தார்.
‘இந்தியாவின் கவலை புரிகிறது’
அதேபோல, இன்றைய உலகில் உணவு, எரிபொருள், உரங்கள் ஆகியவற்றுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக கூறிய மோடி, அவற்றை சரிசெய்ய நாம் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என விளாடிமீர் புதினை கேட்டுக் கொண்டார்.
அதற்கு பதிலளித்த விளாடிமிர் புதின், “உக்ரைன் – ரஷ்யா போரில் உங்கள் (இந்தியா) நிலைப்பாடு என்ன என்பது எனக்கு நன்றாக தெரியும். இந்த விவகாரத்தில் உங்கள் கவலைகளையும் நான் புரிந்து கொண்டிருக்கிறேன். இந்த
பிரச்சினையை விரைவில் முடிக்கவே ரஷ்யா விரும்புகிறது. உக்ரைன் விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பதை இந்தியாவுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்துவோம்” என்றார்.
பிறந்தநாள் வாழ்த்து
இந்த உரையாடலுக்கு பிறகு, பிரதமர் நரேந்திர மோடியை பார்த்த விளாடிமீர் புதின், “உங்கள் பிறந்த தினத்தை நாளை கொண்டாட இருக்கிறீர்கள். ரஷ்ய பாரம்பரியத்தில், பிறந்தநாளுக்கு முன்பாக யாருக்கும் வாழ்த்து தெரிவிக்கமாட்டோம். ஆனால் உங்களுக்கு நான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கிறேன். எங்கள் நட்பு நாடான இந்தியாவுக்கும் எனது வாழ்த்துகள். உங்கள் ஆட்சியில் இந்தியாவில் வளங்கள் செழிக்கட்டும்” எனக் கூறினார்.