அனந்த்நாக்: கடந்த சில வாரங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய மூத்த தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத், கடந்த சில நாட்களுக்கு முன் காஷ்மீர் சென்றார். அங்கு அவர் தனது ஆதரவாளர்களை சந்தித்து பொதுக் கூட்டங்களை நடத்தினார். நேற்று அவர் பங்கேற்ற கூட்டத்தில், ஜம்மு – காஷ்மீரில் முகாமிட்டுள்ள தீவிரவாதிகள் ஆயுதங்களை கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில் தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா தனது சமூக வலைதள பக்கத்தில், குலாம் நபி ஆசாத்துக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்துள்ளது. அதில், பாஜகவின் உத்தரவை ஏற்று நடக்கும் துரோகி என்றும், தனது நிலைப்பாட்டை குலாம்நபி ஆசாத் அடிக்கடி மாற்றி வருவதாகவும் குறிப்பிட்டு அச்சுறுத்தல் வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளது. குலாம் நபி ஆசாத்துக்கு எதிராக தீவிரவாத அமைப்பிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளதால், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.