புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவுவதால் சுகாதாரத்துறை அறிவுறுத்தல் படி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு நாளை முதல் வரும் 25ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் கடந்த 10 நாட்களாக 50 சதவீத குழந்தைகள் காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல மருத்துவமனைகளில் ராஜிவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகளிலும் வெளிப்புற சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதையடுத்து சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமலு கல்வித் துறைக்கு இன்று அனுப்பிய கடிதத்தில், “குழந்தைகளின் சுவாசம் மூலமாக ஒருவரிடம் இருந்து தொற்று மற்றொருவரிடம் பரவுகிறது. குறிப்பாக பள்ளிகளில் அதிகளவு பரவுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் வீட்டில் இருந்தபடியே முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதன் மூலம் இந்த வைரஸ் காய்ச்சலை தடுக்க முடியும். ஆகவே 1 முதல் 8-ம் வகுப்பு வரை குறைந்த நாட்களுக்கு விடுமுறை அளிக்கலாம். இதன் மூலம் புதுச்சேரியில் இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த இயலும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்ட அறிவிப்பில், “புதுச்சேரி சுகாதாரத்துறை தற்போதைய சூழல் தொடர்பாக கல்வித்துறைக்கு அறிவுறுத்தி இருந்தது. குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு முதல்வர், கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் வழிகாட்டுதலின்படி புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செப்டம்பர் 17ம் தேதி முதல் 25ம் தேதி வரை விடுமுறை விடப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.