நாசிக்: நாசிக் பகுதி சுங்கச் சாவடியில் சிஆர்பிஎப் வீரரின் மனைவிக்கும், பெண் பணியாளருக்கும் நடந்த குடுமிப்பிடி சண்டையை ஆண்கள் ஆர்வமாக வீடியோ எடுத்தனர். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அடுத்த பிம்பால்கான் சுங்கச்சாவடியில் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிப்பதற்காக பெண் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அப்போது சிஆர்பிஎப் வீரரின் மனைவி ஒருவர் காரில் வந்தார். அவருக்கும் சுங்கச்சாவடி பெண் ஊழியருக்கும் இடையே ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் திடீரென கைகலப்பாக மாறியது.
இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், புடவை அணிந்த பெண்கள் இருவரும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொள்கின்றனர். அவர்களை சுற்றிலும் 5 ஆண்களும் நின்று கொண்டு வேடிக்கை பார்க்கின்றனர். அவர்கள் பெண்கள் சண்டையிட்டுக் கொள்வதை ஆர்வமாக வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் பெண்களுக்கு இடையிலான சண்டையை தடுத்துவிட ஆர்வம் காட்டவில்லை.
சிறிது நேரத்திற்கு பின் அங்கு வந்த மூத்த அதிகாரிகள், இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பிம்பால்கான் சுங்கச்சாவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுங்கக் கட்டணம் செலுத்துவது தொடர்பாக சிஆர்பிஎப் வீரரின் மனைவிக்கும், பெண் பணியாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியதாக போலீசார் தெரிவித்தனர்.