மும்பை: மும்பை லால்பாக் விநாயகருக்கு கிடைத்த காணிக்கை பொருட்கள் ஏலம் விடப்பட்டன. கிட்டத்தட்ட 5.5 கிலோ தங்கம், 60 கிலோ வெள்ளி, ₹5 கோடி ரொக்கம் இந்தாண்டு கிடைத்துள்ளது. மகாஷ்டிராவில் ஒவ்ெவாரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். கடந்த இரண்டு ஆண்டாக கொரோனா பரவல் இருந்ததால், விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படவில்லை. இந்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டதால் லால்பாக்கின் பாப்பாவை (விநாயகர்) தரிசிக்க லட்சக்கணக்கான மக்கள் வந்தனர். அவர்கள் தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களை விநாயகருக்கு காணிக்கையாக செலுத்தினர்.
தற்போது சதுர்த்தி விழா முடிவுற்ற நிலையில், விநாயகருக்கு அளிக்கப்பட்ட காணிக்கைகள் ஏலம் விடப்பட்டன. இந்த ஆண்டு மட்டும் பக்தர்கள் ரூ.5 கோடியை காணிக்கையாக செலுத்தி உள்ளனர். இவற்றில் 5.5 கிலோ தங்கம், 60 கிலோ வெள்ளி, ஒரு பைக், ரூ.5 கோடிக்கும் அதிகமான ரொக்கம் ஆகியன அடங்கும். இதுகுறித்து விழா அமைப்பின் செயலாளர் சுதிர் சால்வி கூறுகையில், ‘ஏலம் விடப்பட்ட நாளில் கூட பக்தர்கள் காணிக்கை செலுத்தினர். நன்கொடையாக பெறப்பட்ட பொருட்கள் ஏலம் விடப்பட்டன. ஆபரணங்கள், ரொக்கம் ஆகியன கோயில் திருப்பணி குழுவிடம் ஒப்படைக்கப்பட்டன’ என்றார்.