திருச்சி: குவைத்தில் சுட்டு கொல்லப்பட்ட வாலிபர் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அடுத்த லட்சுமாங்குடியை சேர்ந்தவர் முத்துக்குமரன்(40). தனியார் ஏஜென்சி மூலம் குவைத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை உள்ளதாக கூறி கடந்த 3ம் தேதி முத்துகுமரன் குவைத் நாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு கடந்த 9ம் தேதி முத்துகுமரன் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ஒட்டகங்களை மேய்க்க கூறியதாகவும், அதற்கு முத்துகுமரன் மறுப்பு தெரிவித்ததால், அவரை சித்ரவதை செய்து சுட்டுக்கொன்றது அம்பலமானது.
இதையடுத்து அவர்களது உறவினர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு, வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூலம் குவைத் நாட்டின் தூதரக அதிகாரிகளோடு பேசி குவைத் நாட்டில் இருந்து அவரது உடல் நேற்று காலை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து ஸ்ரீலங்கன் விமான மூலம் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு மதியம் கொண்டுவரப்பட்டது. விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, சிறுபான்மையினர் மற்றும் வௌிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர். இதை தொடர்ந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மன்னார்குடி அடுத்த மரக்கடை பகுதியில் அவரது சொந்த ஊருக்கு முத்துக்குமரன் உடல் கொண்டு வரப்பட்டது. அவரது உடலை பார்த்து அவரது மனைவி வித்யா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். முத்துக்குமரன் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் லட்சுமாங்குடி இடுகாட்டுக்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.