புதுடெல்லி: மனைவியின் விருப்பமில்லாமல் கணவன் உறவு கொண்டால் அதை குற்றமாக அறிவிக்கக் கூடிய விவகாரத்தில் ஒன்றிய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவன் அவரை கட்டாயப்படுத்தி உறவு கொள்வது என்பது திருமண பாலியல் வன்கொடுமை என அழைக்கப்படுகிறது. இதனை குற்றச் செயலாக அறிவிக்கக் கோரியும், பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் போது அதிலிருந்து கணவர்களுக்கு விளக்களிக்கும் சட்ட பிரிவுகளை ரத்து செய்யக் கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் இரு வேறு விதமான தீர்ப்பை கடந்த மாதம் 11ம் தேதி வழங்கியிருந்தது.
அதில், \”மனைவியின் விருப்பமில்லாமல் கணவன் உறவு கொண்டால் அதை குற்றமாக தான் பார்த்து அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி ராஜு ஷக்தர் ஒரு தீர்ப்பும், இந்திய தண்டனைச் சட்டம் 375வது பிரிவின்படி அவ்வாறு குற்றமாக கருத முடியாது’’ என மற்றொரு நீதிபதியான ஹரி சங்கரும் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் இருவேறு உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி மற்றும் நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.