இன்று பிரதமர் மோடி பிறந்த நாள்

புதுடில்லி
:பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்த நாள் இன்று
கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பா.ஜ., சார்பில்,
‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற பெயரில் 15 நாட்களுக்கு பிறந்த நாள்
கொண்டாடப்படுகிறது.
பா.ஜ., பொதுச்செயலர் அருண் சிங் கூறியதாவது:

பிரதமர்
மோடியின் பிறந்த நாளை, ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற பெயரில், இன்று
முதல் மஹாத்மா காந்தி பிறந்த நாளான அக்., 2 வரை, 15 நாட்களுக்கு பா.ஜ.,
கொண்டாடுகிறது.
ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கைத்
தரத்தை மேம்படுத்துவதே இந்நிகழ்ச்சிகளின் முதன்மையான நோக்கம்.
நாடு முழுதும் அனைத்து மாவட்டங்களிலும், ‘ஒரே இந்தியா; மகத்தான
இந்தியா’ என்ற பிரசாரத்தில் பா.ஜ., தொண்டர்கள் ஈடுபடுவர்.
இதேபோல் துாய்மை இயக்கம், மருத்துவ முகாம், அன்னதானம் உள்ளிட்ட
பணிகளையும் செய்வர்.
இவ்வாறு அவர் கூறினார்.

‘நமோ’ செயலி

பிரதமர்
மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, நாட்டு மக்கள் அவருக்கு வாழ்த்து
சொல்ல, ‘நமோ மொபைல் போன்’ செயலியில் சிறப்பு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் நமோ செயலி வாயிலாக, பிரதமர்
மோடிக்கு நாட்டு மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த
ஆண்டு, குடும்பத்தினருடன் சேர்ந்து புகைப்படம் அல்லது ‘வீடியோ’
எடுத்து, அதை இந்த செயலியில் அனுப்பி, பிரதமருக்கு வாழ்த்து சொல்லும்
வசதி சேர்க்கப்பட்டு உள்ளது.
இதேபோல், மோடியின் வேண்டுகோளை
ஏற்று துாய்மை இயக்கம், ரத்த தானம், மழைநீர் சேகரிப்பு, மாற்றுத்
திறனாளிக்கு உதவுதல் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை
மேற்கொண்டவர், தங்களுடைய பங்களிப்பை இந்த செயலியில் புகைப்படம்
மற்றும் வீடியோவுடன்
பதிவேற்றலாம்.

56 வகை உணவு

புதுடில்லி
கன்னாட் பிளேசில் உள்ள ‘ஆர்டர் 2.1’ என்ற உணவக உரிமையாளர் சுவீட்
கர்லா கூறியதாவது:பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு, இன்று முதல்
10 நாட்களுக்கு, 56 வகைகள் அடங்கிய ஒரே உணவு ஏற்பாடு செய்துள்ளோம்.
மதிய உணவில் சைவம் மற்றும் அசைவம் இரண்டுமே உண்டு. சைவ உணவு 2,600
ரூபாய், அசைவ உணவு 2,900 ரூபாய். இரவு உணவுக்கு 300 ரூபாய் கூடுதலாக
வசூலிக்கப்படும்.
இரண்டு பேர் வந்து, அதில் ஒருவர் 40
நிமிடங்களில் இந்த 56 வகை ஒரே உணவை முழுமையாக சாப்பிட்டு முடித்தால்,
அவருக்கு 8.5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும். இந்த 10
நாட்களிலும் சிறப்பு உணவு சாப்பிடுபவர்களில் இருவர் குலுக்கல்
முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, கேதார்நாத்துக்கு சுற்றுலா அழைத்து
செல்லப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

நான்கு இடங்களில் உரை

பிறந்த
நாளான இன்று காலை மத்திய பிரதேசம் செல்லும் பிரதமர் மோடி, தெற்கு
ஆப்ரிக்க நாடான நமீபியாவில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள எட்டு
சிவிங்கிகளை, குனோ தேசிய பூங்காவில் திறந்து விடுகிறார். பின்,
வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் குறித்து உரையாற்றுகிறார்.
இதைத்
தொடர்ந்து, மகளிர் சுய உதவிக் குழுவினரின் நிகழ்ச்சியில்
பங்கேற்கும் மோடி, பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து
பேசுகிறார்.இதையடுத்து, விஸ்வகர்ம ஜெயந்தியை முன்னிட்டு,
தொழில்நுட்ப மாணவர்களிடையே திறன் மற்றும் இளைஞர் மேம்பாடு குறித்து
உரையாற்றுகிறார். இன்று மாலை நடக்கும் நிகழ்ச்சியில், அடுத்த
தலைமுறைக்கான
கட்டமைப்பு குறித்து பேசுகிறார்.

இன்று துவங்குது ஏலம்

மத்திய கலாசாரத் துறை அமைச்சர் கிஷண் ரெட்டி கூறியதாவது:பிரதமர் நரேந்திர மோடிக்கு சிற்பிகள், விளையாட்டு வீரர்கள், உலகத் தலைவர்கள் வழங்கிய பரிசுப் பொருட்கள் pmmementos.gov.in மற்றும் pmmementos.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக இன்று முதல் அக்., 2 வரை ஏலம் விடப்படுகின்றன.
ஏலத் தொகை, கங்கை நதியை துாய்மைப்படுத்தும் திட்டத்துக்கு வழங்கப்படும். சில அரிய பரிசுப் பொருட்கள், தேசிய அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.