சென்னை: தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள மின் இணைப்பு களை கணக்கெடுக்கும் பணியில் மின்வாரியம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
தமிழகத்தில் மின்கட்டண உயர்வு கடந்த 10-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. வீடுகளுக்கான மின்கட்டணம் 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டுக்கான மின்கட்டணம் ஒரு யூனிட் ரூ.8 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்த ஆவணம் அவசியம்
அதேபோல, தனி குடியிருப்புகளில் ஒரு வீடு தவிர மற்ற வீடுகள் வாடகை அல்லது குத்தகைக்கு விடப்பட்டிருந்தால் அதற்கான ஒப்பந்த ஆவணத்தை காண்பிக்க வேண்டும். இல்லாவிட்டால், பொது பயன்பாட்டுக்கான மின்கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.8 வசூலிக்கப்படும்.
மேலும், அந்த வீட்டில் ஒரே குடும்பத்தினர் தனித்தனியாக வசித்து வந்தால், அவர்கள் தங்களது தனித்தனி குடும்ப அட்டைகளை காண்பிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்களது வீட்டு மின்இணைப்புக்கும் பொது பயன்பாட்டுக்கான கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
500 யூனிட்டுக்கு மேல் போனால் 2 மடங்கு மின்கட்டணம் கட்ட வேண்டி வரும் என்பதாலும், அரசு வழங்கும் 100 யூனிட் இலவச மின்சாரத்தை பெறுவதற்காகவும் பலர் தனி வீடுகளில் 2 மின் இணைப்பு பெற்றுள்ளனர். இவ்வாறு பெறுவதானால், அந்த வீட்டில் 2 சமையல் அறைகளை காண்பிக்க வேண்டும். ஆனால், பலரும் அதிகாரிகளை சரிகட்டி இவ்வாறு சட்டவிரோதமான முறையில் மின்இணைப்பு பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ஒன்றுக்கும் மேற்பட்ட மின்இணைப்புகள் வைத்துள்ள தனி வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பொதுப் பயன்பாட்டுக்கான மின்இணைப்புகள் குறித்து கணக்கெடுக்கும் பணியை மின்வாரிய அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இப்பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியபோது, ‘‘நாங்கள் முறையாக விண்ணப்பித்து, அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை செலுத்தித்தான் ஒரு வீட்டுக்கு 2 மின்இணைப்புகள் வாங்கியுள்ளோம். தற்போது, புதிய மின்கட்டணம் அமலுக்கு வந்துள்ள நிலையில் மின்வாரிய அதிகாரிகள் திடீரென வீட்டுக்கு வந்து மின்இணைப்பு குறித்து கணக்கெடுக்கின்றனர். இது மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது.
2 மின்இணைப்பு வைத்துள்ளவர்களுக்கு அரசு தரும் 200 யூனிட் மானியத்தை வேண்டுமானாலும் ரத்து செய்யலாம். ஆனால், 2-வது மின்இணைப்புக்கான மின் கட்டணத்தை பொது பயன்பாட்டுக்கான கட்டணமாக மாற்றக் கூடாது’’ என்றனர்.
இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, வருவாயைப் பெருக்கும் நோக்கில், தற்போது முதல்கட்டமாக அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பொது பயன்பாட்டு மின்இணைப்புகள் குறித்த விவரம் மட்டுமே கணக்கெடுக்கப்படுவதாகக் கூறினர்.