புதுடில்லி :புதுடில்லி அரசின் மதுபானக்கொள்கை முறைகேடு விவகாரம் தொடர்பாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, டில்லி ஆகிய மாநிலங்களில், 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டாம் கட்டமாக நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த ஆண்டு நவம்பரில் மாநில அரசு புதிய மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியது. இதன்படி, டில்லி பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 800-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, புதிய மதுபானக் கொள்கையை டில்லி அரசு ஜூலையில் திரும்பப் பெற்றது.
இதற்கிடையே, மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக டில்லி துணைநிலை கவர்னர் வினய்குமார் சக்சேனா குற்றஞ்சாட்டினார். இதை தொடர்ந்து, டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது, சி.பி.ஐ., கடந்த மாதம் வழக்குப் பதிவு செய்தது. மணிஷ் சிசோடியா வீடு உட்பட பல்வேறு இடங்களில் கடந்த மாதம் 19ல், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். சிசோடியாவின் வங்கி பாதுகாப்புப் பெட்டகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.அடுத்து கடந்த 6ம் தேதி, டில்லி, மஹாராஷ்டிரா, ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா ஆகிய ஏழு மாநிலங்களில், 45 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக இரண்டாவதுகட்டமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நாடு முழுதும் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். ஆந்திராவில் உள்ள நெல்லுார் மற்றும் சில நகரங்கள், கர்நாடகா, தமிழகம், டில்லி ஆகிய இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. மதுபான வியாபாரிகள், வினியோகஸ்தர்கள், வினியோக சங்கிலி ‘நெட்வொர்க்’ உடன் தொடர்புடைய 40 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. ஹவாலா மோசடி வழக்கு தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டு டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மியைச் சேர்ந்த அமைச்சர் சத்யேந்தர் ஜெயினிடம், மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக விசாரிக்க, அமலாக்கத்துறையினர் நீதிமன்றத்தில் அனுமதி கோரிஉள்ளனர். அனுமதி கிடைத்ததும் அவரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.
ரூ.46 கோடி முடக்கம்!
‘மொபைல் போன்’ செயலி வாயிலாக கடன் வழங்கும் பல்வேறு நிறுவனங்களின் செயல்பாடுகளை, மத்திய அரசு கண்காணித்து வருகிறது. இதில், பல நிறுவனங்கள் சீனாவின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. அந்நிறுவனங்களை அடையாளம் கண்டு முடக்கும் பணியை மத்திய அரசு செய்து வருகிறது. இந்த வகையில், சீன கடன் செயலி நிறுவனங்களுக்கு சொந்தமான 46.67 கோடி ரூபாயை அமலாக்கத்துறை முடக்கியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement